பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பஞ்ச தந்திரக் கதைகள்

“இளைத்தவர்கள் மேல் எல்லாருக்குமே கோபம் வரும் என்பார்கள். கொடிய அரசர்களின் கோபத்திற்குக் காரணம் யாரால் அறிய முடியும்?

பரந்து கிடக்கும் கடலின் ஆழத்தை அளந்தாலும் அளக்கலாம்; உலகத்தின் சுற்றளவை அளந்தாலும் அளக்கலாம்; மலையின் உயரத்தை அளந்தாலும் அளக்கலாம்; பெண்களின் மனத்தை அளந்தாலும் அளக்கலாம்; தன்னிடம் வருபவர்களை இரைக்காகக் கொல்லும் இந்த அரசர்களின் மனத்தையாராலும் அளக்க முடியாது.


'மின்னல் கொடிபோன்ற பெண்களின் மனம் எப்போதும் காமுகரையே விரும்பி நிற்கும். பொன்னெல்லாம் உலோபிகள் சேர்த்து வைத்திருக்கும் பொருளோடுதான் போய்ச் சேரும். பெருமழையும் கடலிலே போய்த்தான் பெய்யும். அதுபோல், அரசர்களும் அருகதை இல்லாதவர்களைத்தான் விரும்பிக் கூடுவார்கள்.

'ஏதாவது ஒரு காரணத்தால் அரசன் கோபம் கொண்டிருந்தால், வேறொரு காரணம் கூறி அவன் மனத்தைத் திருத்திவிட முடியும். காரணம் இல்லாமலே கோபம் கொண்டவனை எப்படி மனம் மாற்ற முடியும்? அன்று உன்னை அழைத்து வந்து அதிகாரம் கொடுத்தது சிங்கம். இன்று கொல்ல நினைக்கிறது. இதையெல்லாம் நினைத்தால் பாவமாயிருக்கிறது!’ என்று நரி இரக்க பாவத்துடன் பேசியது.