பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


7. கொக்கைக் கொன்ற நண்டு

நாள் தோறும் மீன்களைக் கொத்தித்தின்று உடல் வளர்த்து வந்த ஒரு கொக்கு இருந்தது. அது வழக்கம் போல ஒரு குளத்திற்கு மீன் கொத்தித் தின்னச் சென்றது. அப்போது குளத்தின் கரையில் ஒரு பால் நண்டு மிகக் கவலையோடு நின்று கொண்டிருந்தது.

அந்த நண்டைப் பார்த்து, 'நீ ஏன் கவலையோடிருக்கிறாய்?' என்று கொக்குக் கேட்டது.

என்ன சொல்வேன்! கொலைகாரர்களாகிய வலைகாரர்கள் இந்தப் பக்கத்திலுள்ள ஏரி, குளம் எல்லாம் வலை வீசி ஒரு சின்னஞ்சிறு பொடி மீன் கூட விடாமல் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். நாளைக்கு இந்தக் குளத்திற்கு வரவேண்டும் என்று பேசிக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைக்கு வந்து பிடித்துக் கொண்டு போய் சந்தைக்கடைகளிலே வைத்து விற்று விடுவார்கள். இவர்கள் கைக்குத் தப்புவது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பால்நண்டு பதில் கூறியது.

'நண்டே, நண்டே, பால் நண்டே! அந்தப் பழி கார வலைகாரர்கள் வருமுன்னே தப்புவிக்க நான் ஒரு வழி சிந்தித்திருக்கிறேன். அந்தப்படி செய்தால் எல்லா மீன்களுமே உயிர் தப்பலாம்' என்று கொக்கு கூறியது.