பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14 சாட்சி சொன்ன மரம்

ஒரு பட்டணத்தில் இரண்டு வணிகப் பிள்ளைகள் இருந்தார்கள். ஒருவன் பெயர் நல்ல புத்தி. இன்னொருவன் பெயர் கெட்டபுத்தி. இரண்டு பேரும் பணம் சேர்ப்பதற்காக வெளியூருக்குச் சென்றார்கள். அங்கே நல்லபுத்திக்கு ஆயிரம் பொன் கிடைத்தது, கெட்டபுத்திக்கு எதுவும் கிடைக்க வில்லை.

நல்ல நோக்கமுடைய நல்லபுத்தி, கெட்டபுத்தியைப் பார்த்து, 'கவலைப்படாதே, நாம் இருவரும் ஆளுக்கு ஐநூறு பொன்னாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்' என்று கூறினான்.

'சரியென்று ஒப்புக் கொண்ட கெட்டபுத்தி, 'நாம் உடனே இவ்வளவு பணத்தையும் ஊருக்கு எடுத்துச் சென்றால் கெடுதல் உண்டாகும். இங்கேயே ஒரு மரத்தின் கீழ்ப் புதைத்து வைப்போம். மற்றொரு நாள் வந்து எடுத்துக் கொண்டு போவோம்’ என்றான்.

இது பொருத்தமாகத் தோன்றவே, நல்லபுத்தி ஒப்புக் கொண்டான். உடனே அங்கொரு மரத்தடியில் பள்ளம் தோண்டிப் பணத்தைப் புதைத்து ஓர் அடையாளம் வைத்துவிட்டு இருவரும் ஊருக்குள் சென்றார்கள்.

கெட்டபுத்தி அன்று இரவே திரும்பி வந்து ஆயிரம் பொன்னையும் அடித்துக் கொண்டு போய் விட்டான்.