பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான்கு நண்பர்கள்

8


`உன் அறிவின் உயர்வையும், உன் நெஞ்சில் உள்ள நட்பின் தன்மையையும், அந்த நட்பை நீ பாது காக்கும் முறையையும் கண்டு, உன் நட்பைப்பெற எண்ணியே நான் உன்னிடம் வந்தேன். என் நிலைமையை நீ நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அன்பு ஒன்றுக்காகவே நான் உன்னை நாடி வந்திருக்கிறேன்’ என்று காக்கை கூறியது.

இவ்வளவு உறுதிமொழிகள் கூறியபின், அந்த எலி, இந்த இலவமரத்துக் காகத்தை நம்பிவிட்டது. நம்பிக்கை பிறந்தவுடன் அதன் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. மலர்ந்த முகத்துடன் அது காகத்தை நோக்கி, `நன்று, இனி நாம் என்றும் நண்பர்களாய் இருப்போம்' என்று ஆதரவான பதிலை யளித்தது.

அன்று முதல், காகம் தனக்குக் கிடைக்கும் மானிறைச்சி முதலியவற்றில் எலிக்கும் ஒரு பங்கு கொண்டு வந்து கொடுத்து வந்தது. இப்படியாய்ப் பல நாட்கள் அவை ஒன்றுக்கொன்று உதவியாய் இருந்துவந்தன. Highlights ஒரு நாள் காகம் எலியிடம் வந்து, இந்தக்காட்டில் இரை எளிதாகக் கிடைக்கவில்லை. எனக்குத் தெரிந்த ஆமை ஒன்று இருக்கிறது. அதனிடம் சென்றால் குளத்தில் இருக்கும் மீன்களையெல்லாம் நமக்கு உண்ணத் தந்திடும். நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு நலமாக இருக்கலாம்' என்று கூறியது.