பக்கம்:படித்தவள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 149 அவன் தன் மனைவியை ஒரு திருமணத்துக்கு ஆள்வார் பேட்டைக்கு அழைத்து வந்தான். சந்தோஷமான திருமணம்; எந்தத் தோஷமும் இல்லாமல் வாத்திய கோஷத்தோடு நடைபெற்றது. பாடியவை பழையபாட்டு எனினும் முப்பதை எட்டாத இளம் வாலிபர்கள் பாடினார்கள். கிள்ளை மொழி பேசும் வள்ளைக் கொடிக் காதினர் பள்ளுப்பாட்டுப் பாடியதால் அந்தத் துள்ளும் இசையில் வந்திருந்தவர்கள் நெஞ்சை அள்ளப் பறி கொடுத்தனர். உயிர் ஒட்டமுள்ளவர்கள் பாடிய உருக்கமான பாட்டு; ஆகையால் கூட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டது. நகல் ஆயினும் அசலை ஒர் அசப்பு அசத்திவிட்டது. மணப்பெண் கூடுதலான அழகோடு அமர்ந்திருந்தாள். தி. நகர் கடை பட்டுப்புடவைகள் இவளை அலங்கரித்தன. அவனும் அவளுக்கு இணையாக மேல் நாட்டுப் பாணியில் கோட்டும், அதற்கு ஏற்றபடி சூட்டும், காலுக்குப் பூட்டும் மாட்டிக் கொண்டு ஒரு நாள் கூத்துக்குத் தயாராகி ஒத்திகை இல்லாமலேயே அவளுடன் ஒப்புக்கொண்டு இருந்தான். முன் நாள் மாலை வரவேற்பு; மறுநாள் காலை திருக்கூத்து. இந்த வரவேற்பு என்பது யாருக்கு? எதுக்கு? என்பது எனக்கு இன்னும் விளங்க வில்லை. அவரவர்கள் அட்டைப் பெட்டிகளைக் கைக் குழந்தைகளைப் போலத் தாங்கி வந்தனர். அவற்றை அவர்கள் வாங்கிப் பக்கத்தில் படுக்க வைத்தனர். அடுக்கி வைத்த அட்டைப்பெட்டிகள் மணப் பரிசுகள் என்று பெரிசுபடுத்தப்பட்டன; சிலர் நோட்டுகளை உறையுள் வைத்துப் பூட்டி அதன்மேல் கொடுக்கின்றவரின் பெயரை நாட்டித் தந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/151&oldid=802465" இலிருந்து மீள்விக்கப்பட்டது