பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தடிகள் வாழ்க்கை வரலாறு $ 7 4 சேருமா பிற்காலத்துப் பட்டினத்தாரைச் சேருமா அல் லது இருவர் பேரிலும் வழங்கும் கதைகள - என்ப தொன்றும் துணிந்து கூற முடியாமல் உள்ளது. நம் நாட்டில் வரலாறு படைக்கும் ஆசிரியர்களுக்கு காலம் பற்றிய உணர்வு சிறிதும் இருப்பதில்லை. ஆகவே, நாம் இனிக் கூறப் போகும் வரலாறுகள் தொடர்பான ஒரே வரலாறாய் இருப்பினும் இவ்விருவருக்குமுள்ள கதை கள் சிறிது சிறிதாகச் சேர்ந்து நாளடைவில் வேறு கதைக ளும் கலந்து ஒரே 'பஞ்சாமிர்தமாய் ஒர் உருவம் பெற்றுள்ளன என்று உணர்தல் இன்றியமையாதது. (1) பட்டினத்தார் புராணம்: இதனைப் பாடியவர் பெயரோ காலமோ அறியக்கூடவில்லை. இது பூம்பு கார்ச் சருக்கம், ஆட்கொண்ட சருக்கம், துறவறச் சருக் கம் என்ற மூன்று சருக்கங்களை உடையது. திருவெண் காடர் பூம்புகார் நகரில் வணிகர் மரபில் தோன்றியவர். பட்டினத்துப் பிள்ளையார் என்பது அவர் குடிப் பெயர். திருவெண்காட்டில் வாழ்ந்தார்; பக்தி நிரம்பிய வர். எண்ணற்ற மரக்கலங்கள் அவருக்குச் செல்வத் தைக் கொணர்ந்து குவித்தன. அந்நாளில் சிவசருமர் என்ற சிவவேதியர் மணம் முடிக்கப் பொருளுன்றி வருந்தி இருந்தார். இறைவன் ஓர் இளம் பிள்ளையாக அவர் வசம் வந்து தம்மை விலைக்கு விற்றுப் பொன் பெற்று மணம் செய்து கொள்ளுமாறு பணித்தார். அப் பிள்ளையைத் திருவெண்காடர் ஆயிரம் பொன் கொடுத்து விலைக்குப் பெற்றுச் சென்றார். இப்பிள்ளை யைச் சொந்தப் பிள்ளையாகவே கருதி மருதவாணர் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அப்பிள்ளை இறை வன் திருஉரு ஆதலால் திருவெண்காடர் இல்லத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தியது. அவற்றைக் கண்ட திரு வெண்காடர் அப்பிள்ளையை இறைவன் வடிவமே என்று கருதி மிக்க பணிவுடன் நடந்து கொண்டு வந்தார். அவர் திருவெண்காடருக்கு உலக வாழ்க்கையின் பற்றை ஒழிப்பதற்காகச் செய்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. ஆகவே, ஒரு நாள் மருதவாணர் காதற்ற ஊசியை நூலோடு சேர்த்து ஒரு பட்டுத் துணியில் பொதிந்து அதை ஒரு அழகான பெட்டியில் வைத்து முத்திரையிட்டு திருவெண்காடரிடம் கொடுக்கும்படி தம் அன்னையாகிய இவர் மனைவியிடம் தந்து மறைந்தார்.