பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த அறிக்கையை பரிசீலிக்கும் படியும், விவாதித்து அதனை சட்டமாக்கும்படியும் கேட்டு வைஸ்ராய் டஃப்ரின் 1888ம் ஆண்டு நவம்பர் 6ம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. நார்த் புரூக் பிரபு, சாலிஸ்பரி பிரபு உட்பட பலர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது. அதுதான் 1892ம் ஆண்டு 'இந்திய கவுன்சில் சட்டம்' எனப்படுகிறது. இச்சட்டம் டஃரின் பிரபு விரும்பிய பிரிவினர்களுக்கு மாகாண சட்ட சபைகளில் பிரதிநிதித்துவத்தை வழங் கியது. சட்ட சபைகளிலும் அரசு கவனத்திற்கும் பிரச்சினைகளை இனி அவர்களால் கொண்டு செல்ல முடியும் இப்படி கிடைத்த பிரதிநிதித்துவத்தை யார் கைப்பற்றுவார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஒன்று சென்னை மகா ஜன சபையினர் இப்பதவிகளில் உட்காரலாம் அல்லது காங்கிாஸ் பிரமுகர்கள் இப்பதவிகளில் உட்காரலாம். இந்த இரண்டு அமைப்புகளிலும் டஃப்ரின் பிரபு யார் நலனை பாதுகாக்க வேண்டுமென விரும்பினாரோ அவர்கள்தான் நிறைந்திருந்தார்கள். எனவே இவ்விரு அமைப்புகளும் அதிகாரத்தை கைக்கொள்ளும் அமைப் புகள் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த பின்னணியில்தான் பண்டிதரின் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் எப்படி பார்த் தாலும் தாழ்த்தப்பட்டோருக்கு சாதகமானதாக இல்லை. எனவே தம்மை அமைப்பாக்கிக் கொள்ள முயன்று வந்தனர். அப்படி ஒரு சில அமைப்புகள் உருவாகி இருந்தன. இதில் வீச்சாக எழுந்தது "சாதிபேதமற்ற திரா விட மகாஜன சங்கம்" இச்சபையை 1890ல் பண்டிதர் தொடங்கினார். அதன் தலைவரும் அவரே. இச் சங்கத்தின் முதல் மாநாடு 1.12.1891 அன்று நீலகிரியில் கூட்டப்பட்டது. இம் மாநாடுதான் நவீன இந்தியா கண்ட முதல் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக் கான விகிதாச்சார உரிமை எனும் கோரிக்கை முன்வைக்கப் பட்டது.

இம் மாநாட்டில் பல்வேறு சமூக - அரசியல் நடப்புகள் விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் கோரிக்கைகளாக அரசிடம் முன்வைக்கும் நோக்கில் காங்கிரஸுக்கு அனுப்ப வேண்டும் என முடிவாகி இருந்தது. எனவே அந்த கோரிக்கை மனு பண்டிதரால் தயாரிக்கப்பட்டது. அதில் 10 கோரிக்கைகள் இருந்தன, அந்த கோரிக்கைகளில் :

15 / பண்டிதரின் .... சமூகநீதிக் கொள்கை