பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருக்கத்தான் செய்கிறது. இக்கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் இயங்கிய தலித் அமைப்புகள் சாதிபேதமற்ற திராவிடர் மகாசபை, ஆதி திராவிட மகாஜன சபை, பறையர் மகாஜன சபை, தென்னிந்திய சாக்கிய சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள். இதில் முதல் மூன்று அமைப்புகளே அரசியல் நீரோட்டத்தில் இணைந்திருந்தன. இதில் ஆதி திராவிட மகா ஜன சபை அதன் பழைய தலைவர்களின் வழி நடத்துதலில் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன என்றாலும் அதைப்பற்றின தகவல்கள் அதிகம் இல்லை, பறையர் மகாஜன சபை அதன் வசீகரமிக்க தலைவரின்றி மந்தமாக இயங்கியது. இச்சபையின் நிறுவனர் ரெட்டை மலை சீனிவாசன் 1900ல் ஏற்பட்ட ஒரு மனக்கசப்பினாலும், இங்கிலாந்து சென்று தம் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்ற நோக்கத்தினாலும் கப்பல் பயணம் மேற்கொண்டவர் பயண இடையில் ஏற்பட்ட உடல் நல கோளாறினால் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார். எனவே, இக் கொந்தளிப்பான காலத்தில் ரெட்டைமலை சீனிவாசன் இங்கில்லை. எனினும் பறையர் மகாஜன சபை அரசிடம் கோரிக்கை விடுக்கும் அளவிலான இயக்கமாக இயங்கி வந்தது.

இதே காலத்தில்தான் பண்டிதர் முன்பே 1891ல் தொடங்கிய சாதி பேதமற்ற திராவிட மகாஜனசபையும் இயங்கி வந்தது. இச்சபை அரசியல் பிரச்சினைகளை கவனித்துக் கொண்டதென்றால், தென்னிந்திய சாக்கிய சங்கம் பண்பாட்டு தளங்களில் பணியாற்றியது. இந்த இரண்டு அமைப்பு களுக்கும் நிறுவனர், தலைவர் பண்டிதர். இந்த இரண்டு அமைப்புகளிலும் பண்டிதரைப் பின்பற்றிய தலித் மக்கள் இருந்தார்கள். இந்த அமைப்பும் தேவையான கோரிக்கைகளை அரசிடமும் - பிற அமைப்புகளிடமும் வைத்துக் கொண்டிருப்பதை 1891 முதல் காண்கிறோம். திராவிட மகாஜன சபையின் பிரநிதியாக - ஆல்காட் அவர்களை சந்தித்த பண்டிதர் பின்பு பெளத்தராகி தென்னிந்திய சாக்கிய சங்கத்தை தொடங்கினார்.

இப்படி வீச்சான பணிகள் நடந்து கொண்டிருந்தாலும், மிண்டே பிரபு இங்கு வந்த தொடக்க காலத்தில் இருந்த கொந்தளிப்புகளில் இவ்வமைப்புகளைப் பற்றின செய்திகளை இந்திய சாதி வரலாறு முற்றிலும் புறக்கணித்தது மட்டுமின்றி மறைத்தே விட்டது. இந்த மோசமான இருள் சூழ்ந்த பின்னணியில் 1907ம் ஆண்டு ஜூன் மாதம் - பண்டிதர் ஒரு பைசா தமிழன் இதழைத் தொடங்கினார், பிறகு பண்டிதர் இட ஒதுக்கீட்டு கோட்பாடுகளை தம் துல்லியபடுத்தல்களை எப்படி மேற்கொண்டார், நிலை நிறுத்தினார்....

27 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை