பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதென முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பானது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமுள்ளது என்பது குறித்த வரலாற்று குறிப்புகள் தமிழனில் மட்டுமே கிடைக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை பண்டிதர் வரவேற்றார். 1909 ஜூலை 28ம் நாள் தமிழன் இதழில்.

கருணைதங்கிய ராஜாங்கத்தார் இந்தியர்களென்று பொதுவாக காரியாதிகளை நடத்தவிடாமல் அவர்கள் எவ்வகையாகப் பிரித்துக் கொண்டு போகின்றார்களோ அது போலவே இராஜாங்க ஆலோசனைச் சங்கத்திலும், சாதிப் பிரிவு, மதப்பிரிவு, பாஷைப் பிரிவு முதலியவைகளில் பெருந்தொகையாய் உள்ளவர்களுக்குத் தக்கவாறு ஒவ்வொருவரை நியமித்து அவரவர்களுக்குள்ள குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சகல சாதியோடும் சகல மதஸ்தரும், சகல பாஷைக்காரர்களும் சமரச சுகம் அனுப விக்கும் படியான பேரானந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்...

ஆதலின் நமது கருணை தங்கிய ராஜாங்கத்தார் எடுத்த நோக்கத்தை சோர்வடையாமல் நடத்தி சகல சாதியோரிலும் பெருந்தொகையினராயிருந்து பலவகைக் கஷ்டங்களை அனுபவித்து வரும் ஏழைக் குடிகளை சகலரைப் போலும் சுகமடையுஞ் சட்ட திட்டங்களை முன்னுக்குக் கொண்டு வருவார் களென்று நம்புகிறோம் (1:165)

என்று சகல மதசாதியரின் பிரதிநிதித்துவத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்த்தார். அதுவுமின்றி மாகாண சட்டசபை தேர்தல்கள் நடத்த வேண்டிய முறை குறித்தும் தனது கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்தியர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை கூடாது என்பது பண்டிதரின் கொள்கையாக இருந்தது. ஏனெனில் கூட்டு வாக்களிப்பு முறையானது மீண்டும் இந்துக்களுக்கே வாய்ப்பளித்து விடும் என்பது பண்டிதரின் உறுதியான கருத்து. முனிசிபாலிட்டி (Municipality) தேர்தல் களில் நடக்கும் ஊழலை சுட்டிக்காட்டி

"ஒட்டு வாங்குவதற்கு இவ்வளவு பெரிய ஐயர் வந்தால் எப்படி மாட்டேனென்று சொல்லுகிறது. இவ்வளவு பெரிய முதலியார் வந்தால் எப்படி மாட்டேனென்று சொல்லுகிறதெனப் பேசிக் கொண்டே கோச்சு வண்டியிலேறிக் கொண்டு ஒட்டு வாங்கிக் கொள்ளுகின்றவர்கள் எவ்வகை எழுதிப் பெட்டியிற் போடும்படிச் சொல்லுகின்றார்களோ அம்மேறையே நடந்து

கௌதம சன்னா / 52