பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யையுங் கிஞ்சித்து விட்டுவிடுவார்களாயின் யாருக்கு சுகமளித்து யாரைப் பாழாக்கி விடுவார்கள் என்பதற்கு சாட்சியம் வேண்டுமோ

வேண்டுவதில்லை. ஆதலின், கருணை தங்கிய இராஜாங்கத்தார் தாங்கள் ஏற்படுத்தும் ஆலோசினை சங்கத்தில் சகல சாதியோர்களையும் சேர்த்து அவரவர் குறைகளை தேற விசாரித்து தேச சீர்திருத்தம் செய்வதே சிறப்பாகும்" (1:183)

என்று 1909, செப்டம்பர் 15ம் நாள் தமிழன் இதழில் எழுதினார். பண்டிதர் தமது அடிப்படைக் கருத்துக்களை தொடர்ச்சியாக முன் வைத்துக் கொண்டும், அதற்கு எதிரான கருத்துக்களை எதிர்த்துக் கொண்டும் வந்தார். இந்த நிலையில்தான் 1909ம் ஆண்டு நவம்பர் 15ம் நாள் லண்டனில் மிண்டோ - மார்லியின் அரசியல் சீர்திருத்த "இந்திய கவுன்சில் சட்டம் 1909ன் விதிகள் வெளியானது. இதில் அச்சீர் திருத்தத்தின் முழு வடிவமும் விளக்கப்பட்டது. அத்திட்டத்தின் படி :

  • மாகாண சட்ட சபைகள் விரிவுபடுத்தப்படும்.
  • கவர்னர் ஜெனரல் கவுன்சில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 60ஆக

இருக்கும்.

  • இராஜாங்க சட்டசபை (imperial council)க்கு 37 அதிகாரிகள்

உறுப்பினர்களும், 23 அதிகாரிகள் அல்லாதவர்களும் நியமிக்கப்படுவார்கள். இதில் 37 அதிகாரிகளில் 28 பேரை கவர்னர் ஜெனரல் நியமிப்பார். மீதமுள்ளவர்கள் முன்னாள் அதிகாரிகள் மட்ட உறுப்பினர்கள் (Ex.officio)

எனப்படுபவர்கள் இவர்களில்

                    கவர்னர் ஜெனரல் 1 நபர்

                    சாதாரண உறுப்பினர்கள் 6 பேர்

                    சிறப்பு உறுப்பினர்கள் 2 பேர்

என இருப்பார்கள்.

மேலும் அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களில் 23 பேரில் 5 பேரை கவர்னர் ஜெனரல் நியமிப்பார். மீதமுள்ளவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

கௌதம சன்னா / 54