பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 ஆ புலவர் கா. கோவிந்தன் காடு என்ற கருத்தே தோன்றும் வகையில், அணிவகுத்து நிற்கும் படைவீரர் ஒவ்வொருவரும், தம் தலையில் செடி கொடிகள் சிலவற்றையோ, மரக்கிளைகளையோ செருகிக் கொள்வர். இது நம் நாட்டில் மட்டும் நிகழ்வதோ, இக்காலத்தில் மட்டும் நிகழ்வதோ அன்று; மேனாட்டு மன்னர்களும் கையாளும் முறை இது. பண்டைக் காலத்தும் மேற்கொள்ளப்பட்ட முறை இது. மாக்பெத் நாடகத்தில், ஒரு பெரும்படை இவ்வாறு அணிவகுத்துச் சென்ற காட்சியைக் கண்டும், அது படைச் செலவு என்று கொள்ளாமல், ஒரு காட்டின் இடப்பெயர்ச்சியாம் என்று கொண்டமையால் தோல்வி கண்ட நிகழ்ச்சியை, நாடகாசிரியர் நன்கு விளக்கியுள்ளார். ஆக, இப்போர் முறையைக் கருத்தில் நிறுத்தி நோக்குவார்க்குத் தும்பைப் போர் வீரர், தும்பை அணிவதன் காரணம் தெற்றெனப் புலனாம். தும்பைப் போர் கடற்கரையை அடுத்து நிகழ்வதாகும். அது வெண்மணல் பரந்த இடமாகும். அந்நிலத்தில் மிகப் பெருமளவில் முளைத்து நிற்கும் செடியும் தும்பையேயாம். அதனால், அந்நிலத்தில் இயங்கும் படை, பகைப்படையின் கண்ணிற்கு, அது படையன்று கடற்கரை மண்மேடே என்ற பிழையுணர்வே உண்டாகும் வகையில், அந்நிலத்துத் தும்பைச் செடிகளைத் தன் படைவீரர் தலையில் சூட்டிச் செல்வது இயற்கையொடு ஒட்டிய நிகழ்ச்சி ஆயிற்று. ஆகவே, தும்பை வீரர், தும்பை அணிந்து செல்வராயினர் எனல் மேலும் சிறக்கும். . இவ்வாறு, தொடக்கத்தில், போரின் இன்றியமையா நிகழ்ச்சியாக விளங்கிய தும்பை சூடும் வழக்கம் பிற் காலத்தில் ஒரு மரபாகக் கருதப்பட்டுவிட்டது.