பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 243 யெல்லாம் தானே ஏறிட்டுக் கொள்வதால் வாள்பட்டும், வேல் பாய்ந்தும் ஆன வடுக்கள், அவன் மேனியெலாம் நிறைந்து அவன் மெய்வனப்பை அறவே கெடுத்துக் காண வெறுக்கும் கொடுங்காட்சி யுடையதாக மாற்றிவிட்டன. அதனால், அவன் புகழ் கேட்டு அவனை நாடி வருவோர் அனைவரும் அவ்வடுவாழ் அவன் வடிவைக் காண வெறுத்து ஓடி விடுவர். இவ்வாறு தன்னை விரும்புவோரும், தன்னை வெறுப்பதற்குக் காரணமாகும் அப்போர்ப் புண்களைப் புண் எனக் கருதாது, புகழின் கண் என மதிக்கும் அவன் போர்க்களப் புகழ் வேட்கையினைப் பாடிப் பாராட்டியுள்ளார் புலவர் எறிச்சிலுரர் மாடலன் மதுரைக் குமரனார். "நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே." -புறம் 167. போர்ப் புகழ் விரும்பும் வீரர்களின் உளப்பாங்கு இதுவே ஆதலின், அது காரணமாக எழும் போர் நிகழ்ச்சியைக் கூறும் தும்பைத் திணையின் விளக்கம் கூற வந்த ஆசிரியர் தொல்காப்பியனார், களத்தில் பகைவர் எறிந்த எண்ணிலாக் கணைகளும் வேல்களும் தன் மேனியெங்கும் பாய்ந்ததன் காரணமாக உயிர் பிரிந்த நிலையிலும், உடல் நிலை குலைந்து விழாதே நிற்பதும், பகைவர் வாளேறுண்டு இரண்டாக வெட்டுண்டு தனித் தனியே வீழ்ந்த தலையும் உடலும், அட்டையின் அறுபட்ட இரு கூறுகளும் ஆடுவது போல், மண்மீது செயலற்று வீழ்ந்து விடாது, தலை துள்ளுவதும், உடல் எழுந்து ஆடுவதும்