பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 ஆ. புலவர் கா. கோவிந்தன் உயிர் வாழ உறுதுணை புரியும் உணவினைப் பெறுவதற்காக என்ற உயர்ந்த குறிக்கோள் காரணமாக, இன்றியமையா நிலையில் எழுந்த போர், காலம் செல்லச் செல்லத் தேவையற்ற ஒன்றாக, சொல்லொணாக் கொடுமை யுடையதாக மாறிவிட்ட காரணத்தால், நிலையாமை உணர்வை எடுத்துக் காட்டி ஒழிக்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. பலவாற்றானும் வளர்ந்துவிட்டது என்ற பாராட்டிற் குரிய இந்நாட்களிலும், பல்லாற்றானும் உயர்ந்தவர் என்ற பாராட்டினைப் பெற்றவரும் உணர மறுக்கும் போர்க் கொடுமையைத் தமிழர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து, அதை ஒழிக்க வல்ல ஒரே வழி நிலையாமை வுணர்வுதான் என்பதையும் அறிந்து, அறம் வழங்கியுள்ளார்கள் என்றால், தமிழர்தம் பண்பாட்டுப் பெரு நிலைதான் என்னே!