பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 59 விளங்கினர்; அவர்பால் கல்கால் கவணை என்ற அரிய படைக்கலம் ஒன்றும் இருந்தது; அதன் துணையால், அவர்கள் பகைவர்களின் அரிய பெரிய அரண்களையும் தகர்த்துத் தூளாக்கி விடுவர் எனப் பதிற்றுப் பத்துக் கூறுவதும் காண்க. "ஆரெயில் அலைத்த கல்கால்கவணை நார் அரிநறவின் கொங்கர்" (பதிற்று.88). அவ்வாறு தம் ஆனிரைகளைக் குறிஞ்சி நிலக் காடுகளுக்குச் சென்று மேய்க்கும் ஆயர், அங்குத் தாமும் தம் ஆனிரையும் ஏதம் அற்று இரவிலும் இருத்தற்பொருட்டு ஒரு சிறு அரணும் அமைத்துக் கொள்வர். அத்தகைய அரண், குறும்பு என அழைக்கப் பெறும். ஆயர் பலர், பல நிரைகளோடும் ஒன்றுகூடி வாழும் அவ்விடம் ஒரு சிற்றுரர் போலும் காட்சி அளிக்கும். ஆகவே. ஆனிரை கவர்ந்து வரச் செல்லும் வெட்சியார், அந்நிரைகளைக் கைப்பற்றுவதன் முன்னர், அச்சிற்றுார் அரண்களில் உள்ளாரை அழித்தல் இன்றியமையாததாம். அதைக் கூறும் "ஊர் கொலை" என்ற துறை, அதனால், வெட்சித் திணைத்துறைகளுள் ஒன்றாகச் சேர்க்கப் பட்டுள்ளது. ஈண்டு ஊர் என்றது, முல்லை நிலத்தை யொட்டியுள்ள குறிஞ்சி நிலத்தில் ஆயர் அரண்அமைத்து வாழும் இடமேயாம். நிற்க. காடு அழித்து நாடுகண்ட நிலையிலும், ஆனிரை ஒம்பும் ஆயர், பேரூர்களின் மதிலகத்து வாழ்வினை விரும்பாது, மதிற்புறத்தே அமைந்துள்ள புறநகர்ச் சேரி வாழ்வினையே விரும்புவாராயினர். ஆயர் முல்லை நிலத்தவர் என்ப. முல்லையாவது காடும் காடு சார்ந்த பகுதியுமாம். தங்கள் ஆனிரைக்கு வேண்டும் புல் தரும் நிலம் அதுவே யாதலின், ஆயர் காட்டகத்து வாழ்வையே விரும்புவர். அதனால், பேரூர் வாழ்வினராகி விட்ட