________________
புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 'பல்லாங்குழி' கட்டுரை புதிய விசை இதழில் வெளியானது. இந்தக் கட்டுரைக்கு இடதுசாரிச் சார்புடையவர்களிடமிருந்து மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பினை நான் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். எனவே தான் சுற்றியுள்ள சமூகத்தின் அசைவுகளைத் தன்னின் பகுதியாகக் காணும் போக்கு இன்னமும் தமிழ் வாசிப்பாளர்களுக்கு போதிய அளவுக்குக் கைகூடவில்லை என நாம் கருதவேண்டியுள்ளது. இன்று உலகமயமாக்கம் மிகப்பெரிய பண்பாட்டு நெருக்கடியினை நமக்கு உருவாக்கியுள்ளது. அதனை நாம் முழுமையாக உணர்ந்தபாடில்லை. ஒற்றைப் பண்பாட்டை உருவாக்கும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்குப் பண்பாட்டின் பன்மியத் தன்மையினை உணர்வதும் பேணுவதுமே வழி துறைகளாக அமையும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையே இந்த எழுத்துக்களை மீண்டும் அச்சேற்றுதவற்கான அடிப்படை. இந்த இரு நூல்களையும் முறையே முன்னதாக வெளியிட்ட என்.சி.பி.எச்.நிறுவனத்தார்க்கும், ஜெயா பதிப்பகத்தார்க்கும் என் நன்றி. முந்திய வெளியீட்டு முயற்சிகளில் துணைநின்ற அன்பினர்க்கு நன்றி. காலத்திலும், களத்திலும் எனக்குக் கைவிளக்காகவும், மலை விளக்காகவும் வழிகாட்டிய என் ஆசான் சி.சு.மணி அவர்கட்கும் என் நன்றியுணர்வு மரபு சார்ந்ததன்று; அதற்கும் மேலானதாகும். புதிய சேர்க்கைகளோடு தொகுப்பாக இப்போது வெளியிடும் காலச்சுவடு பதிப்பகத்தார்க்கும் இம்முயற்சியில் பொறுமையும், ஆர்வமும் காட்டிய சலபதிக்கும் நான் நன்றியன். பாளையங்கோட்டை தொ.பரமசிவன் 22.10.2001