பக்கம்:பண்பாட்டு அசைவுகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிற்கும் நிலையினை 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். மலைக்காடுகளில் உள்ள சுனைகளில் 'சூர்மகள்' 'அரமகள்' என்றும் அணங்குகள் (மோகினிகள்) வாழ்கின்றனர் என்பது பழைய நம்பிக்கை அதுபோலவே தெய்வங்களின் இடப்பெயர்ச்சிக்கும் நீர் ஓர் ஊடகமாக அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். விழாக்காலங்களில் சாமியாடுபவர்களின் தலையில் ஏற்படும் நீர் கரகத்துக்குள் சாமியின் அருளாற்றல் கலந்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர். நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு பிரிக்கமுடியாது. நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமையும். நிலத்தால் திரிந்துபோன நீரின் சுவையை மேம்படுத்தத் தமிழர்கள் நெல்லியினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர். கிணற்று நீர் உவராக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களைப் போட்டுவைப்பதும் ஊருணிக் கரைகளிலே நெல்லிமரங்களை நட்டுவைத்து அதற்கு 'நெல்லிக்காய் ஊருணி என்று பெயரிடுவதும் தமிழ் மக்களின் வழக்கம். நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் இனிப்புச்சுவை தெரியும். இச்செய்தி சங்க இலக்கியத்தில் ஓர் உவமையாகவும் எடுத்தாளப்பட்டுள்ளது. நீரின் தூய்மையினைப் பேணுவதிலும் தமிழர்கள் கருத்துச் செலுத்தியுள்ளனர். நீருக்குள் மனிதக் கழிவு இடுதல் பெரும்பாவமாகக் கருதப்படுகிறது. 'நீருக்குள் ஜலபானம் செய்த பாவத்தில் போகக்கடவாராகவும்' என்று ஆவணங்கள் இதனைக் குறிக்கின்றன. சங்கரன்கோயிலுக்கு வடக்கே பனையூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோவில் இறைவனுக்கு அக்கோயிற் கல்வெட்டுக்களில் ‘நன்னீர்த்துறையுடைய நாயனார்' என்ற பெயர் காணப்படுகிறது இயற்கையின் பேராற்றலில் ஆரியர் நெருப்பினை முதன்மைப்படுத்தியது போல திராவிடர் நீரினை முதன்மைப்படுத்தினர். தெய்வ வழிபாட்டுச் சடங்குகளைப் போலவே தமிழர்களின் வீட்டுச் சடங்குகளிலும் நீர் சிறப்பிடம் பெறுகின்றது. செம்பு நீரில் அல்லது குவளை நீரின் மேல் பூக்களையோ பூவிதழ்களையோ இட்டு வழிபடுவது எல்லாச் சாதியாரிடமும் காணப்படும் பழக்கம். நெடுஞ்சாலைகளில் கோடைக் காலத்தில் நீர்ப்பந்தல் அமைப்பது ஒரு அறச்செயலாகக் கருதப்பட்டது. சோழர் காலத்துக் கல்வெட்டொன்று தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் இறைத்துத் தருபவனுக்கும், அதற்குக் கலமிடும் குயவனுக்கும், தண்ணீர் ஊற்றித் தருபவனுக்கும் மானியமளித்த செய்தியினை குறிப்பிடுகிறது.

€18 தொ.பரமசிவன்