பக்கம்:பண்பாட்டு அசைவுகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடைகள் உண்டாயின. அப்பொழுதும்கூட, பிராமணரும் பிராமணரை அடுத்த மேல் சாதியினரும், முசுலிம்களும் தங்கள் தங்கள் சாதியினருக்கு மட்டுமே உரிய உணவகங்களை நடத்தி வந்திருக்கின்றனர். நாட்டு விடுதலைக்குப் பின்னரே பிற சாதியார் உணவகம் நடத்தும் தொழிலை மேற்கொள்ளத் தொடங்கினர். நாட்டு விடுதலைக்குப் பின்னரும் பிராமணர் மட்டும் உண்ணும் உணவகங்கள் இருந்தன. அவற்றை எதிர்த்துப் பெரியார் ஈ.வெ.ரா.வின் தொண்டர்கள் மறியல் செய்தபின் அவ்வழக்கம் கைவிடப்பட்டது நாமறிந்த செய்தியே. பிச்சை முகத்தில் சோகம் இழையோடப் பல்லைக் காட்டியும், தாழ் மொழிகளைச் சொல்லியும் கைவிரித்து நீட்டியும் பிச்சையெடுத்தல் மிகக் கேவலமான செயலாகத் தமிழ்ச் சமூக அமைப்பில் கருதப் பட்டது. 'கேட்க வாயில்லாத பசுவிற்குத் தண்ணீர் கேட்டுப் பிச்சையெடுப்பதும் கேவலமானது' என்கிறார் திருவள்ளுவர். ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் என்பது திருக்குறள். இன்றும்கூடப் 'பிச்சைக்காரப்பயல்', 'பிச்சையெடுக்கப் போ' என்ற தொடர்கள் வசையாகவே பயன்படுத்தப்படுகின்றன. 'இரவலர்' என்பது சங்க இலக்கியத்தில் ஏழையரான கலைஞர்களைக் குறிக்கவே வந்துள்ளது. ஏன் என்றால், எதுவும் இன்றிப் பிச்சையெடுத்தல் என்ற வழக்கம் தமிழ்நாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. சமண மதத்தின் துறவிகள் மூலமாகவே இவ்வழக்கம் பரவியிருக்க வேண்டும். சமண மதக் கருத்துக்களை அறிந்த திருவள்ளுவர்தான் 'பிட்சை' என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லாக 'இரத்தல்' என்பதைப் பயன்படுத்துகிறார். முற்றும் துறந்த துறவிகள் பசித்தபோது பிச்சையெடுப்பதைச் சமண மதம் அனுமதித்தது. இல்லறத்தார் அவர்களுக்குப் பிச்சையிடுவதைப் பெரும் பேறாகக் கருதவும் வைத்தது. பௌத்த மதத் துறவிகளும் பிச்சை ஏற்று வாழ்ந்தனர். கௌதம புத்தரும் பிச்சை ஏற்று உண்டிருக்கிறார். வறுமை காரணமாகப் பிச்சையேற்று உண்ணும் நிலைக்கு வந்த யாரும் அதைத் தாம் பிறந்து வளர்ந்த ஊரில் செய்வதில்லை. மரபுவழி வந்த மானம்' என்னும் சமூக மதிப்பீடே இதற்குக் காரணமாகும். ஒவ்வொரு ஊரிலும் முகமறியாத தூரத்து ஊரில் இருந்து வந்தவர்களே பிச்சையெடுப்பது வழக்கம். இவர்களைக் 32 தொ.பரமசிவன்