பக்கம்:பண்பாட்டு அசைவுகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்னும் சொல்லோடு தொடர்புபடுத்தி 'உரிமையுடையவள் தாய்', எனச் சிலர் விளக்கம் தருகின்றனர். ஆய் என்பதே மூலச் சொல். ஆயின் ஆய் (பாட்டி) ஆயா(ய்) என அழைக்கப்படுகிறாள். என் தாய், உன் தாய் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் யாய், ஞாய் ஆகிய சொற்களைக் காண்கிறோம். தன் ஆய் தாய் ஆனது போலவே, தன் அந்தை தந்தையாகி இருக்கிறது. எந்தை, நுந்தை முதலிய இலக்கியச் சொற்களை என் + அந்தை, நும் + அந்தை என்றே பிரித்துக் காண வேண்டும். மரூஉ இலக்கணமாக ஆதன் + தந்தை - ஆந்தை எனக் கொள்ளுவதும் தவறு.ஆதன் அந்தை எனக் குறிப்பதே சரி. பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ந்த எல். அனந்தகிருஷ்ண ஐயர் தமிழகத்தின் தென்னெல்லைப் பகுதியான பத்மநாபபுரம் பகுதியில் வாழும் மலைவேடன் எனப்படும் பழங்குடி மக்கள், தந்தையை 'அந்தை' என்றும், பெரியப்பாவை 'வலியந்தை' என்றும் அழைப்பதைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். (The Travancore Tribes & Castes, Vol.I.P. 151) மாமன், மாமி,நாத்தூண் நங்கை என வழங்கும் சொற்களின் மூலச்சொற்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. அண்ணன் மனைவி அண்ணியானது போல மாமன் மனைவி மாமி ஆகியிருக்க வேண்டும். அம்மையுடன் பிறந்தவனைக் (தாய்மாமன்) குறிக்கும் சொல்லாக 'அம்மான்' வழங்குகிறது. இச்சொல் இன்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் களிடம் வழங்கி வருகிறது. 'அத்திம்பேர்', 'அம்மாஞ்சி' முதலியன பார்ப்பனர்கள் பயன்படுத்திவரும் சொற்களாகும். தந்தையுடன் பிறந்தவளான அத்தையின் மகனைக் குறிக்க ‘அத்திம்பேர்' என்ற சொல்லும், அம்மான் மகனைக் குறிக்க 'அம்மாஞ்சி' என்ற சொல்லும் வழங்கிவருகின்றன. அம்மாஞ்சி என்ற சொல் அம்மான் சேய் என்பதன் திரிபு. அத்தையன்பர் என்பதே அத்திம்பேர் எனத் திரிந்ததாகச் சிலர் கருதுகின்றனர். மைத்துனன், மைத்துனி என வழங்கும் சொற்கள் மைதுன (பாலியல்) உறவின் அடிப்படையில் வந்ததாகும். 'மைதுன' என்பது வடமொழி. இச்சொல் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இராசராசன் கல்வெட்டுக்களில் 'நன்மச்சுனன்' என்றே வழக்குச் சொல்லாக வருகிறது. 'மைத்துனன் நம்பி மதுசூதன்' என்று பாலியல் உறவுக்குரிய காதலனைக் குறிக்கிறது கி. பி. 7ஆம் நூற்றாண்டின் ஆண்டாள் பாசுரம். மைத்துனி என்ற சொல்லே தென் மாவட்டங்களில் 'மதினி', 'மயினி' என வழங்கி வருகிறது. திருவாங்கூர்ப் பழங்குடி மக்களில் சிலரும் இன்றைய மலையாளி களும் 'மைத்துனன்' என்பதற்கு மாற்றாக 'அளியன்' என்ற பண்பாட்டு அசைவுகள் 53