பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

மக்களுக்காக ஏற்பட்டுள்ள ஆட்சியில் இயன்றவரை மக்களுடன் பகைமை கொள்ளலாகாது; "அற்பப் பகைதானே' என்று எண்ணிச் சிறிய பகைக்கும் இடந்தரலாகாது. அத்தகைய ஒரு சிறிய பகை இராமன் கூனியிடம் இளம் பருவத்தில் நேரிட்டது. அஃது இராமனைப் பல துன்பங்களுக்கு ஆளாக்கி விட்டது. இதனை நினைவு கூர்ந்து சுக்கிரீவனிடம் பேசுகின்றான் இராமன்.

சிறியரென்று இகழ்ந்து நோவு

செய்வன செய்யல் மற்றிந் நெறியிகந் தியானோர் தீமை

இழைத்தலால் உணர்ச்சி நீண்டு குறியதா மேனி யாய

கூனியால் குவவுத் தோளாய் வெறியன வெய்தி நொய்தின்

வெந்துய்ர்க கடலில் வீழ்ந்தேன்"

சொந்த அநுபவத்தை மனத்திற் கொண்டு மனம் விட்டுப் பேசுகின்றான் இராமன். மக்களை அனைத்துக் கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்பது இராமன் வற்புறுத்தும் கொள்கையாகும்.

அடைக்கலம் புகுந்த வீடணனை ஏற்றுகொள்வதற்கு இராமன் எல்லோரையும் கலந்து ஆலோசிக்கின்றான். சுக்கிரீவன், சாம்பவான், நீலன் ஆகிய தலைவர்களும் மற்றுமுள்ளோரும் வீடணனை ஏற்றுக் கொள்ளலாகாது என்று ஒரு முகமாகக் கூறுகின்றனர். இறுதியில் அநுமன் வீடணன் தீயவன் அல்லன் என்று காரணங்களுடன் கூறி 'வீடணன் வரவு நல்வரவாகட்டும் என்று எடுத்துரைக் கின்றான். அப்போது இராமன் அங்கிருந்தோரை நோக்கிக் கிறுவது:

42. கிட்கிந்தை - அரசியல் - 11