பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 81

திருவள்ளுவர் கூறும் விருந்தை இக்காலத்தில் நாட்டுப் புறங்களில் மூலை முடுக்குகளில் வறியராய் வந்தவர்க்குக் கூழ்வார்க்கும் செயலில்தான் காணலாம். நண்பகல் வெயிலில் வரும் வழிப் போக்கர் ஒருவருக்கு தென்னைமரம் ஏறி இளநீர்பறித்து அதனைச் சீவி அருந்தத் தரும் உழவரிடம் விருந்தயரும் பண்பினைக் காணலாம். வழிப் போக்கர் இளநீரைப் பருகும்போது பருகுவன்ன அருகாநோக்கமொடு உற்றுப் பார்த்து மகிழும் உழவர் முகத்தில் ஒளிரும் புத்தொளியில் விருந்தோம்பும் பண்பு பளிச்சிடுவதைக் கண்டு மகிழலாம்.

இக்காலத்தில் உண்ண விடுதிகள் மலிந்த நகரத்தில் விருந்தயரும் பண்பைக் காணமுடியாது. நகரங்களில் புதியராய் வருவோரில் மானமுடைய பலரும் தெரிந்தவர் இல்லத்திற்கோ உறவினர் வீட்டிற்கோ செல்லாமல் கையில் காசு கொண்டு உணவு விடுதிகளை நாடிச் சென்று உண்டு பசி தீர்கின்றார்கள். கையில் காசுக்கு வழியற்றவர்களில் சிலர் உதவிபெற முடியாமல் பட்டினி கிடந்து வாடி வருந்தி நகரங்களை விட்டுவிரைவில் நீங்கிச் செல்கின்றனர்; மற்றும் சிலர் மானம் இழந்து மதிகெட்டு பிச்சை எடுத்தேனும் வயிறு வளர்க்கத் தலைப்படுகின்றனர். வேறு சிலர் திருடு முதலியவற்றைக் கற்றுத் திரிகின்றனர். இன்றைய அன்றாட நாளிதழ்களை எடுத்தால் முகமூடிக் கொள்ளை, பிறநூதன முறைகளில் கொள்ளை இவைதாம் முதற்பக்கச் செய்திகளாக அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இஃது இன்றைய பண்பாடு: ஆகவே, புதியவராய் உதவிக்கு உரியவராய் வருவோருக்கு விருந்து அளித்து உதவும் வாழ்க்கை இன்று அரிதாகிவிட்டது எனலாம்.

இல்வாழ்க்கை அறத்துக்கு மனையறம் என்றும் பெயர். மனையறங்களுக்கு ஏற்ற குணமும் மனைவளத்திற்கு எற்ற செயலும் கொண்டு துணை நிற்கும் மனைவியை