பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பதினெண் புராணங்கள் செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மந்திரத்தையும் உபதேசித்தனர். துருவன் ஓரிடத்தில் அமர்ந்து விஷ்ணுவையே தியானம் செய்து மந்திரத்தை ஜெபிக்கலானான். நாட்கள் நகர்ந்தன. துருவன் தவ வலிமை தேவர்களையும் அச்சம் கொள்ளச் செய்தது. அவன் ஒருவேளை இந்திரப் பதவிக்கு ஆசைப்படுகிறானோ என்று சந்தேகித்த தேவர்கள் அவன் தவத்தைக் கலைக்க அரும்பாடு பட்டனர். இவர்களையல்லாமல் அசுரர்களும் அவன் தவத்தைக் கலைக்க முயன்றனர். எதுவும் செய்ய முடியாத நிலையில் விஷ்ணு துருவன் முன் தோன்றினார். விஷ்ணுவை நேரே தரிசனம் செய்தான் துருவன். 'என்ன வரம் வேண்டும்?' என விஷ்ணு கேட்க, தங்களைத் தரிசித்ததே போதுமானது, இதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டான் துருவன். இருந்தாலும் ஏதாவது ஒரு வரத்தைக் கேள் என்று விஷ்ணு கூற எவரும் அடைய முடியாத இடத்தை தான் அடைய வேண்டும் என்று துருவன் கேட்டான். அவன் விருப்பத்தை நிறைவேற்றும் முறையில் அசையாத துருவ நட்சத்திரமாக அவனை மாற்றி, சப்த ரிஷி மண்டலத்தின் அடியில் இருக்குமாறு வரம் தந்தார். சப்த ரிஷி மண்டலம் உட்பட எல்லா நட்சத்திரங்களும் இன்றும் துருவனைச் சுற்றி வருவதைக் காணலாம். பிரகலாதன் கதை தைத்தியர்கள் என்றழைக்கப்பட்ட அசுரர்கள் பரம்பரையில் வந்தவன் ஹிரண்யகசிபு என்பவன். மாபெரும் தவங்கள் செய்து மூன்று லோகங்களையும் ஆளும் சக்தியைப் பெற்றான். அன்றியும் இந்திரன், அக்னி, யமன், நிருதி வருணன், வாயு, குபேரன் ஆகிய தெய்வங்களையெல்லாம் வென்று அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தி விட்டான். அவர்கள் அனைவரும் இங்குமங்குமாக அலைந்து திரிந்து கடைசியில் விஷ்ணுவிடம் சரணடைந்தனர்.