பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 97 பாண்டவர்களுள் ஒருவராகிய நகுலன், தாத்தாவாகிய பீஷ்மரைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்கிறான். அதற்கு பதில் கூறவந்த பீஷ்மர் நகுலனைப் பார்த்து, 'கலிங்க நாட்டில் எனக்கொரு பிராமண நண்பர் இருந்தார். அந்த பிராமண னுக்கு ஒரு முனிவர் நண்பராக இருந்தார். அந்த முனிவர் இறந்த காலத்தையும், பழம் பிறப்பையும் அறியும் ஆற்றல் உள்ளவர். இந்த சக்திகளின் துணை கொண்டு யமனுக்கும், ஒரு யமதூதனுக்கும் நடந்த உரையாடலை அம்முனிவர் அறிந்திருந்தார். தாம் அறிந்ததை அம்முனிவர் என் பிராமண நண்பருக்குச் சொல்ல அதை அவர் எனக்குச் சொன்னார். அதை நான் இப்பொழுது உனக்குச் சொல்கிறேன். அந்த உரையாடல் விவரம் வருமாறு: யமன் : விஷ்ணுபக்தர்கள் பக்கத்திலேயே நீ போகாதே. என்னைப் பொறுத்தவரை இந்த விஷ்ணு பக்தர்களைத் தவிர மீதமுள்ள அனைவருக்கும் நான்தான் தலைவன். உண்மையில் நான் சுதந்திரமானவன் அல்ல. நான் செய்யும் பணிகளை விஷ்ணுதான் மேற்பார்வை செய்கிறார். அது மட்டுமல்லாமல் என்னை தண்டிக்கும் உரிமையும் உடையவர் அவர். விஷ்ணுவின் கமலப் பாதங்களை வணங்கும் பக்தர்கள் பக்கம் செல்லாதே. - எமதுாதன் : ஒருவன் எப்படி விஷ்ணு பக்தன் ஆவது? யமன் : அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம தர்மத்தை யார் மீறுவதில்லையோ, யாருடைய மனத்தில், அகங்காரம், பொறாமை முதலியவை இல்லையோ, யார் பகைவர் நண்பர் என்ற வேறுபாடு பாராட்டாமல் அனைவருடனும் சமத்துவமாக இருக்கிறார்களோ, யார் அகிம்சையைக் கடைப்பிடிக்கிறார்களோ, யார் கோபத்தை விட்டொழித்தார்களோ அவர்களே விஷ்ணு பக்தர்கள் ப.பு.-7