பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 191 முரண்டு செய்தனர். அவர்கள் எண்ணத்தைத் திசை திருப்ப விஷ்ணு அழகிய பெண் வடிவுடன் ராட்சசர்கள் பக்கம் செல்ல, அமிர்தத்தை மறந்துவிட்டு அவளைப் பார்ப்ப திலேயே அவர்கள் காலம் சென்று விட்டது. பதினான்காவது நரசிம்ம அவதாரம். இரண்யகசிபு என்பவனைக் கொல்ல சிங்கத்தின் தலையுடன், மனிதனின் உடம்புடன் தோன்றிய இந்த அவதாரம் இரண்யகசிபு மார்பைத் தன் நகத்தாலேயே பிளந்து விட்டது. பதினைந்தாவது வாமன அவதாரம். தைத்திய மன்னனாகிய மகாபலியிடம் குள்ளனாகச் சென்று மூன்றடி மண் தானம் கேட்டு, அவன் தந்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து மூன்று உலகங்களையும் மூவடியால் அளந்த அவதாரம் ஆகும். பதினாறாவது பரசுராமர் அவதாரம், பரம்பரையாக அரசர் பணியை மேற்கொண்ட சத்திரியர்கள், செல்வம், அதிகாரம் என்பவற்றால் மதிமயங்கி மக்களுக்குத் தீமை செய்யத் துவங்கிய போது 21தலைமுறை வரை சத்திரிய மன்னர்களே இல்லாமல் செய்த அவதாரம் ஆகும் இது. பதினேழாவது அவதாரம், வேதவியாசர் என்று காரணப் பெயர் கொண்ட அவதாரம் ஆகும். பராசர முனிவருக்கும், சத்தியவதிக்கும் கிருஷ்ண துவையம்பாயனர் என்ற இயற் பெயருடன் பிறந்த இவர், மிக விரிந்தும் பரந்தும் யாரும் கற்க முடியாத நிலையிலும் இருந்த வேதங்களை ஒழுங்குபடுத்தி நான்கு வேதங்களாக வகுத்தமையால் வேதவியாசர் என்ற பெயர் பெற்றார். பதினெட்டாவது இராம அவதாரம். பத்தொன்பதாவது பலராம அவதாரம். இருபதாவது கிருஷ்ண அவதாரம். பதினெட்டாவது இராம அவதாரத்தை இராமாயணத்திலும், பத்தொன்பது, இருபது அவதாரங்கள் பற்றி மகாபாரதத்திலும் விரிவாக அறியலாம்.