பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 239 தீமை என்பதே கலியுகத்தில் இலக்கணமாக இருக்கும். பொருட்செல்வம்தான் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்ற எண்ணம் மக்கள் மனத்தில் புகுந்துவிடும். நேர்மையான வாழ்க்கை என்பதே அரிதாகிவிடும். உறவினர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் பதவி அளித்தல், லஞ்ச ஊழல் என்பது மலிந்துவிடும். இந்நிலையில் கல்கி அவதாரம் எடுத்துக் கலியுகத்தை ஒழித்துச் சத்திய யுகத்தைத் தோற்றுவிப்பார். கல்கி ஆனவர் சம்பாலா என்ற கிராமத்தில், விஷ்ணுயாசா என்ற பிராமணனின் மகனாகப் பிறப்பார். சுகதேவமுனிவர் பரிட்சித்து மன்னனைப் பார்த்து, 'நீ பிறந்த அன்றிலிருந்து ஆயிரத்து நூற்றுப் பதினைந்து ஆண்டுகள் கழித்து, மகாபத்மநந்தாவுக்கு முடிசூட்டு விழா நடைபெறும் என்று கூறினார். பரிட்சித்து மன்னன் முடிவு முடிவுகாலம் நெருங்கியதும் அவன் சுகதேவ முனிவரைப் பார்த்து, 'பாகவத புராணத்தைக் கேட்டதால் தெளிவடைந்து விட்டேன். இறப்புப் பற்றிய அச்சம் ஒரு சிறிதும் இல்லை எனக்கு’ என்று கூறியவுடன் சுகதேவமுனிவர் விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். பரிட்சித்தைக் கொல்ல வேண்டிய தட்சகன் என்ற பாம்பு ஒரு பிராமண வடிவம் கொண்டு பரிட்சித்தை நெருங்கிற்று. காரணம், பாம்பு வடிவத்துடன் வந்திருந்தால் யாரும் அதனை அரசன் பக்கத்தில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பிராமணர் என்ற காரணத்தால் அரசன் பக்கத்தில் செல்லத் தட்சகனுக்கு முடிந்தது. குறிப்பிட்ட நேரத்தில் பரிட்சித்தைத் தட்சகன் கடித்துக் கொன்றுவிட்டது.