பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 297 கற்புக்கரசியாகிய அனுசுயாவிடம் நீங்கள் சென்று வேண்டிக் கொண்டால் அவர் தலையிட்டு ஏதாவது செய்யலாம்” என்று பிரம்மன் கூறினார். அனைவரும் அனுசுயையிடம் சென்று முறையிட அனுசுயை அந்த ஏழைப் பிராமணத்தியினிடம் வந்து, அவளுடைய சாபத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள். மேலும் மாண்டவியின் சாபத்தால் அவள் கணவன் இறந்தால், அவன் உயிரை மீட்டுத் தரும் சக்தி தனக்கு உண்டு என்றும் அறிவித்தாள். பிராமணன் மனைவி சாபத்தை மீட்டுக் கொண்டாள். சூரியன் புறப்பட்டான், தொழுநோயாளியான பிராமணன் இறந்தான். உடனே அனுசுயை தன் ஆற்றலால் பிராமணன் உயிரை மீட்டாள். அதுமட்டுமல்லாமல், அவன் நோய் தீர்ந்து, இளமை யோடு வாழ அருள் செய்தாள். தேவர்கள் அனுசுயையின் உதவிக்கு நன்றி பாராட்டி அவள் வேண்டும் வரத்தைத் தருவதாகக் கூறினர். அனுசுயை, "திரிமூர்த்திகளும் தனக்குப் பிள்ளைகளாகப் பிறக்க வேண்டும்” என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். தேவர்கள், "அப்படியே ஆகட்டும்” என்றனர். அனுசுயா பெற்ற பிள்ளைகள் தேவர்கள் கொடுத்த வரப்படியே அனுசுயைக்குத் திரிமூர்த்திகளில் ஒருவராகிய பிரம்மன், சந்திரன் என்ற பிள்ளையாகவும்: விஷ்ணு தத்தாத்ரேயர் என்ற பிள்ளை யாகவும் சிவன் துர்வாசர் என்ற பிள்ளையாகவும் தோன்றினர். முன்னொரு காலத்தில் கார்த்தவீரியன் என்ற மன்னன் உலகை ஆட்சி செய்து வந்தான். அவன் இறந்த பிறகு அவனுடைய மகனாகிய அர்ச்சுனன் என்பவன் ஆட்சியை ஏற்க மறுத்துவிட்டான். “எப்படி ஆட்சி செய்தாலும் அரசன் என்பவன் நரகத்திற்கே போக நேரிடும். வரி வசூலிப்பது என்பதும், வரி விதிப்பது என்பதும் எனக்குப் பிடிக்காத