பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பதினெண் புராணங்கள் கூடித்திரிய, வைசியர்களில் பல பல நண்பர்கள் இருந்தனர். அதே நேரத்தில் நாக லோகத்தில் இருந்து அஸ்வதாரா என்ற மன்னனின் மைந்தர்கள் இருவர் ரிதத்துவஜாவிடம் நட்புக் கொண்டனர். அவனுடைய நற்பண்புகளில் ஈடுபட்ட இருவரும், பகலெல்லாம் இவனுடன் இருந்துவிட்டு இரவு நேரத்தில் மட்டும் தங்கள் உலகிற்குச் சென்றனர். ஒருநாள் அஸ்வதாரா தன் மைந்தர்களைப் பார்த்து, “பிள்ளைகளே! பல நாட்களாகப் பகல் நேரத்தில் உங்களைக் காணவே முடியவில்லை. இரவில் மட்டும் இங்கே வருகிறீர்கள். பகல் பொழுதை எங்கே கழிக்கிறீர்கள்?" என்று கேட்டவுடன், மைந்தர்கள் இருவரும் ரிதத்துவஜா பற்றியும், அவனுடைய பராக்கிரமம், நற்பண்புகள் பற்றியும் கூறினர். இதைக்கேட்ட அஸ்வதாரா, “நல்லது பிள்ளைகளே! பல நாட்களாக அவருடைய உபசரிப்பைப் பெற்றுக் கொண்ட நீங்கள் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? நம்முடைய நாட்டில் மிகுதியாகக் கிடைக்கின்ற பொன், வெள்ளி, மாணிக்கம், வைரம் ஆகியவற்றை எடுத்துச் சென்று உங்கள் நண்பனுக்குப் பரிசளியுங்கள்” என்று கூறினார். "தந்தையே! இந்தப் பொருள்களை அவன் ஏற்றுக் கொள்வது கடினம். அவனுடைய நாட்டிலேயே இவை ஏராளமாக இருக்கின்றன. மேலும் அவனைப் பற்றி ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன், கேளுங்கள்.” ஒருமுறை காலவன் என்ற பிராமணன் ஒர் அதிசயமான குதிரையை சத்ருஜித்துக்குப் பரிசளித்தான். அந்தக் குதிரை செல்லாத இடமே இல்லை. நான் வசிக்கும் ஆசிரமத்தில் தைத்திரியர்கள் பல மிருகங்களின் வடிவத்தினை ஏற்றுக் கொண்டு வந்து தொல்லை தருகின்றனர். அப்போது இந்தக் குதிரை ஆகாயத்தில் இருந்து வந்தது. இந்தக் குதிரையை வைத்துக் கொண்டு உன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள் என்று அசரீரி பிறந்தது. அதனால்தான் குதிரையை உங்களிடம்