பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பதினெண் புராணங்கள் மூவரும் கோமதி ஆற்றின் நடுப் பகுதியில் நாகலோகம் செல்லும் வழி இருந்ததால், அதில் இறங்கினர். இப்பொழுது நண்பர்கள் இருவரும் நாக வடிவு எடுத்ததைக் கண்ட அரசகுமாரன் ஆச்சரியப்பட்டான். நண்பர்கள் இருவரும் தங்கள் கதையைச் சொல்லி, நாக லோக மன்னனாகிய தங்கள் தந்தை அஸ்வதாராதான் ரிதத்துவஜாவை அழைத்து வர ஏவினான்’ என்ற உண்மையையும் கூறினார்கள். மகிழ்ந்த அரசகுமாரன் நாகலோகத்தில் இறங்கி பாம்பு வடிவத்தில் இருந்த அஸ்வதாரா மன்னன் பொன்னும் மணியும் இறைத்த சிம்மாசனத்தில் இருக்க, வணக்கம் செய்தான். மன்னன் அஸ்வதாரா, “அரசகுமாரனே! என் பிள்ளைகள் மூலம் உன்னுடைய அறிவு, அழகு, பராக்கிரமம் ஆகியவற்றை அறிந்தேன். என் பிள்ளைகளிடம் நீ காட்டிய அன்புக்குரிய பரிசாக ஏதாவது ஒன்றைத் தர விரும்புகிறேன், கேள்” என்றான். அது கேட்ட அரசகுமாரன், “நாக மன்னரே! நன்றி பெரிதும் உடையேன். என் தந்தையிடம் எல்லாச் செல்வங் களும் நிறைந்திருக்கின்றன. எனக்குள் பேராசை கிடையாது. நான் எதையும் விரும்பவில்லை” என்று கூறினான். அது கேட்டு மகிழ்ச்சி அடைந்த நாக மன்னன், “நல்லது அரச குமாரனே. இந்த உலகப் பொருள்களில் உனக்குப் பற்று இல்லை என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இருந்தாலும் நீ வியப்படையக்கூடிய பரிசினை உனக்கு வழங்கப் போகிறேன்” என்று கூறி, மதலசாவை வரவழைத் தான். வியப்பால் திடுக்குற்ற அரசகுமாரன் இது ஏதோ மாயை நாடகம் என்று நினைத்து விட்டான். அவன் குழப்பத்தை அறிந்த மன்னன் நடந்தவற்றைக் கூறி, "இப்பொழுது என் மகளாகப் பிறந்த இவளை ஏற்றுக் கொண்டு நெடுநாள் வாழ்வாயாக’ என்று ஆசீர்வதித்தான். அங்குத் தங்கி அவன் உபசரிப்பை ஏற்றுக் கொண்ட அரசகுமாரன், மனைவியோடு தன் நாட்டிற்கு வந்தான்.