பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பதினெண் புராணங்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் போய்விட்டது. மிகச் சிறந்த இந்த இடத்தில் ஈடு இணையில்லாத ஒரு விஷ்ணு ஆலயத்தை நிர்மாணிக்கத் திட்டமிட்டான். பேரரசனாகிய அவன் தான் மட்டும் இதனைச் செய்யாமல் பிற அரசர்கள், செல்வர்கள், வணிகர்கள் ஆகியவர்களும் இதில் பங்குபெற வேண்டி அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்தான். கோயில் எப்படிக் கட்ட வேண்டும் என்ற திட்டம் உருவாயிற்று. அதற்கு வேண்டிய பொன், பொருள் முதலியவை கணக்கின்றிக் கிடைத்தன. கோயில் நிர்மாணம் தொடங்கு வதற்கு முன் ஒர் அஸ்வமேத யாகம் செய்யவேண்டுமென அரசன் விரும்பியதால் பொன்னாலேயே ஒரு மண்டபம் தயாரிக்கப்பட்டது. பரத கண்டம் முழுவதிலிருந்து மன்னரும், மக்களும் பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து சேர்த்தனர். இந்த யாகத்தில் கிடைக்கும் தானத்தைப் பெறுவதற் காகவே பிராமணர்கள் நாடு முழுவதிலுமிருந்து வந்து கூடினார்கள். அஸ்வமேத யாகம் முடிந்தவுடன் கோயில் கட்டும் பணி துவங்கி அதுவும் முடிந்துவிட்டது. எந்த விக்கிரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து இங்கே பிரதிஷ்டை செய்வது என்ற கவலையுடன் உறங்கிய அரசனுக்கு விஷ்ணு கனவில் தோன்றி சமுத்திரக் கரையில் உள்ள மரத்தை அடையாளம் காட்டி அதனைப் பயன்படுத்திச் சிலைகள் செய்ய வழிகாட்டினார். மறுநாள் அந்த மரத்தை வெட்டித் தயாரித்த பொழுது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் அந்தணர் வேடத்தில் வந்து உடனடியாக பலராமன், கிருஷ்ணன், சுபத்திரை ஆகிய மூவருடைய சிலைகளையும் விநாடி நேரத்தில் செய்து முடித்தனர். இதுவே இன்று பிரசித்தியுடன் விளங்கும் பூரி ஜெகந்நாதர் ஆலயம்.