பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 பதினெண் புராணங்கள் தாங்கி எமனுக்கு எதிரே வந்து குழல் வாசித்துக் கொண்டு நடனமாடினாள். தவம் கலைந்த எமன் அவளைப் பார்த்து "நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? ஏன் இந்தக் காட்டில் நடனம் ஆடுகிறாய்?” என்று கேட்டான். அந்தப் பெண் வஞ்சகம் இல்லாமல் நடந்தவற்றைக் கூறினாள். அதைக் கேட்ட எமன் அவள் உண்மை பேசியதால் “வேண்டிய வரத்தைக் கேள் தருகிறேன்” என்றான். அப்பெண், "இந்திரனுடைய சபையில் எனக்கு ஒரு நிலையான இடம் வேண்டும்” என்று கேட்டாள். எமன் அந்த வரத்தைக் கொடுத்து விட்டு, “உன்னுடைய இசை மிக நன்றாக இருந்தது. அதை நான் ரசித்தேன். அதற்காக இன்னொரு வரம் கேள்" என்றான். "இந்தப் பகுதிக்கு என்னுடைய பெயர் வழங்க வேண்டும்” என்று அவள் கேட்க, எமனும் அதை ஏற்றுக் கொண்டான். அன்றையிலிருந்து அந்தப் பகுதி வர்த்தமனா என்று பெயர் பெற்றது. எமன் தவம் செய்த இடத்தில் பிதிர்க்கடன் செய்வது மிக உயர்ந்தது. வர்த்தமனி தேவலோகம் சென்ற பிறகு எமன் மீண்டும் தவத்தில் ஈடுபட்டான். இந்திரன் பயந்தான். அவன் மட்டும் அல்லாமல் தேவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரும் எமனுடைய தவத்தைக் கண்டு பயந்து சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், எமனுக்கு எதிரே தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார். எமன், "இந்த இடத்திற்கு என் பெயர் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். சிவன் அதை ஏற்றுக் கொண்டதால் அந்தப் பகுதி தர்மாரண்யம்' என்று பெயர் பெற்றது. தருமன் என்பது எமனுக்கு மற்றொரு பெயர். இந்த தர்மாரண்யப் பகுதியில் சிவன் லிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத்திற்கு விஸ்வேஸ்வரா என்பது பெயர். அங்கு எமன் ஒரு குளத்தைத் தோண்டி அதற்கு தர்மவாபி என்று பெயரிட்டான்.