பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/673

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 645 தவம் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் செய்த புண்ணிய வசத்தால் விஷ்ணு ஆகிய நீங்களே இந்தச் சிறுகுடிலுக்கு வந்திருக்கிறீர்கள். தாங்கள் வந்தது பற்றி பெருமகிழ்ச்சி அடைகிறோம். என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டுதான் தாங்கள் இங்கு வந்திருக்க வேண்டும். தயை கூர்ந்து அதனை எங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று கூறினார். கிருஷ்ணன், முனிவரே! சிவனைக் கண்டு அவருடன் பேச வேண்டும். அதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள்’ என்று கேட்க, முனிவர் பாசுபத விரதம் இருந்தால் சிவனைக் காணலாம். அவ்விரதம் இருப்பவர்கள் எல்லையற்ற நம்பிக்கையுடனும், பக்தியுடனும் இதனைச் செய்ய வேண்டும்’ என்று சொல்ல, கிருஷ்ணன் அவருக்கு நன்றி கூறிவிட்டு இமயமலைக்குச் சென்றார். இமயமலையில் சிவனைக் குறித்துக் கடுமையான பாசுபத விரதம் பூண்டார். நீண்ட காலத்திற்குப் பிறகு சிவன் பார்வதி யுடன் தோன்றி, "கிருஷ்ணன் என்ற பெயருடன் வாழும் விஷ்ணுவே! இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருளும் உம்முடையவை. நினைத்த மாத்திரத்தில் எதையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாமே. அப்படியிருக்க என்னைக் குறித்துத் தவம் செய்யக் காரணம் என்ன?’ என்று கேட்டார். கிருஷ்ணன் 'தங்களைப் போன்றே எனக்கொரு பிள்ளை பிறக்க வேண்டும். அந்தப் பிள்ளை சிறந்த சிவபக்தனாக இருக்கவேண்டும் என்ற வரத்தைக் கேட்க, சிவன் 'அவ்வண்ணமே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். அதன்படியே கிருஷ்ணனுக்கு, மனைவி ஜாம்பதியின் மூலம் சம்பா என்ற மகன் பிறந்தான். அவன் சிறந்த சிவ பக்தனாக வாழ்ந்தான். இதனை அடுத்து கூர்ம புராணம் யுகங்கள் பற்றிப் பேசுகிறது,