பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

பக்தியோடும், சத்திய நிலையோடும் இன்றைய இளைஞர்கள் திகழ வேண்டும் என்னும் எண்ணத்தைத் தம் வாழ்நாள் முழுக்கக் கொண்டிருந்த தமிழாசான் அ. ச. ஞா. அவர்கள், அவ்வெண்ணத்தை இலக்கிய — ஆன்மிகச் சொற்பொழிவுக்கூட்டங்கள் வாயிலாகவும், பல நூல்களின் வாயிலாகவும் வெளிப்படுத்தி வந்தார்கள்.

“வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்” என்று அறிவியல் புரட்சியில் இந்தியர் இறங்குவர் என்பதற்குக் கட்டியம் கூறிய மகாகவி பாரதியார், ஆன்மிக எழுச்சியிலும் ஞானம் தேடும் முயற்சியிலும் இந்தியர் முதன்மை பெற்று உலகத்தார்க்கு வழிகாட்டியாக விளங்குவர் என்ற தீர்க்க தரிசனத்தையும் வெளிப்படுத்தினார். அதனை பேராசிரியர், அமரர் அ. ச. ஞா. அவர்கள் தம் வாழ்நாளில் மெய்ப்பித்துப் பெரும்புகழ் ஈட்டிவிட்டார்கள். தமிழ்ப் பெரியாரான அ. ச. ஞா. அவர்கள் தமிழ்ப் பெருங்குடி மக்களை விட்டுப் பிரிந்துவிட்டாலும், அவர்கள் ஆக்கித் தந்துள்ள ஆன்மிக - இலக்கிய நூல்களின் மூலமாக தமிழர் நெஞ்சத்தை விட்டு நீங்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் தொகுத்துத் தந்துள்ள பதினெண் புராணங்கள் என்னும் அரிய ஆன்மிக நூலை கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுப் பெருமை கொள்கிறது. அமரர் அ. ச. ஞா. அவர்களின் மகளார் திருமதி ஞா. மீரா அவர்களுக்கு கங்கை புத்தக நிலையம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்நூலுக்கு நல்ல முறையில் கணினி ஒளிஅச்சு செய்து தந்த எஸ்.பி.எம். கிராபிக்ஸ் பெ. மணி அவர்களுக்கும் எங்கள் நன்றி. - கங்கை புத்தக நிலையத்தார்