பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/704

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 பதினெண் புராணங்கள் கொண்டார். சுக்கிராச்சாரியார் உடனே தன் மகளிடம் "மகளே! நாம் ஒரு சிக்கலில் இருக்கிறோம். கச்சன் என் வயிற்றினுள் இருக்கிறான். அவனை என் மந்திரத்தால் உயிருடன் எழுப்பினால், அவன் என்னைக் கிழித்துக் கொண்டு வெளியே வர வேண்டும். நான் இறந்துவிடுவேன். எங்கள் இருவரில் ஒருவர்தான் உயிரோடு இருக்க முடியும். யார் வேண்டும்” என்று கேட்க, தேவயானி "இருவருமே எனக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள். ஆதலால் இருவருமே உயிருடன் இருக்க வேண்டும்" என்று கூற சுக்கிராச்சாரியார் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். அவர் கச்சன் டெயரைச் சொல்லி, வயிற்றுக்குள் இருந்த அவனுக்கு மிருத்யுசஞ்சீவினி மந்திரம் உபதேசம் செய்தார். அதன் பிறகு அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். வந்த அவன் அதே மந்திரம் சொல்லி அவரை எழுப்பினான். சிலகாலம் கழித்து அவன் தேவலோகம் செல்லப் புறப்பட்டான். அவனைத் தடுத்து நிறுத்திய தேவயானி, உன் மேல் அளவற்ற காதல் கொண்ட என்னை விட்டு விட்டு நீ எங்கே செல்கிறாய்? என்னை மணந்து கொள் என்று வேண்டினாள். கச்சன், நீயோ குருவின் மகள், குருவின் ஸ்தானத்தில் வைத்து என்னால் மதிக்கப்பட வேண்டியவள். மேலும் ஒரு காரணம் உள்ளது. நானே உன் தந்தையின் வயிற்றில் இருந்து வெளியே வந்ததால் உனக்குச் சகோதரன் முறையாகி விட்டேன். உன்னை மணந்து கொள்வது என்பது பெரும் தவறாகிவிடும் என்று கூறிவிட்டான். காதலில் தோல்வி அடைந்த தேவயானி, அவன் மேல் கடுங்கோபம் கொண்டு, "என்னை ஏமாற்றிவிட்டுப் போகும் உனக்கு என் தந்தையிடம் கற்றுக் கொண்ட எவையும் பயன்படாமல் போகக் கடவதாக” என்று சபித்தாள்.