பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii மேநாட்டார் மித்தாலஜி (Mythology) என்ற சொல்லால் ஒரு இனத்தின் மிகப் பழைய இலக்கியங்களைக் குறிப்பிடுவர். இதற்கு நேரான தமிழ்ச் சொல்லாக செவிவழி இலக்கியம் என்ற தொடரைப் பயன்படுத்தலாம். இத்தகைய மித்தாலஜி இலக்கியத்தை அதிகமாகப் பெற்றுள்ளது கிரேக்க மொழியாகும். சிறந்த நாகரிகங்கள் என்று இன்று கூறப்படும் கிரேக்க, உரோமானிய, எகிப்திய, மெஸ்பட்டோமிய, சுமேரிய நாகரிகங்கள் அனைத்துமே இவ்வகை இலக்கியத்தைப் பெரிதும், சிறிதுமாகப் பெற்றுள்ளன. பெரும்பாலும் தெய்வங்கள் பற்றியும், உலகத் தோற்றம் பற்றியும், அம் மக்களின் வீரவாழ்வு பற்றியும் பேசும் இயல்புடையன இவை. இவற்றை வரலாறு என்று நினைத்து ஆராய்வதில் பயனில்லை. வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்தால் இவற்றில் பெரும்பாலானவை அடிபட்டுப் போய்விடும். இத்துணை அறிவு வளர்ந்துவிட்ட இக்காலத்தில் கூடச் சமுதாய வரலாற்று ஆய்வாளர்கள் இந்த மித்தாலஜி இலக்கியங்களை ஏற்றுக் கொள்கின்றனர். இவற்றை அறிவு கொண்டு ஆராய்வதைவிட அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வது சார்புடையதாகும். இன்றைய நடைமுறை வாழ்வில் நாம் சிலவற்றை நியாயமானவை என்றும், இதுதான் முறை என்றும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறுதியிட்டு வைத்துள்ளோம். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் தொகுத்து வைத்துள்ள கதைப் பகுதிகளில் இன்று நாம் வகுத்துள்ள சட்டதிட்டங்களை ஏற்றிப் பார்ப்பது பொருத்த மற்ற செயலாகும். இந்திய நாட்டிலும் வேதகாலம் என்று சொல்லப்படும் காலத்திற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னரே நாகரிகமான வாழ்க்கையும் சமுதாய அமைப்பும் இருந்து வந்ததை மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களின்