பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் பத்து

111


சொற்பொருள் முதலியன : சேரலாதன் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். ‘முனை பனிப்பப் பிறந்து’ என்றது. தோன்றிற் புகழொடு தோன்றுக என்றபடி தோற்றப் பொலிவோடு பிறந்ததாம். பனித்தல் - நடு நடுங்கல். ஊழ் - முறைமை. ஆராத்திரு - நுகரநுகர விருப்பந்தீராத இனிய செல்வம். இவனது நன்னனை அழித்த வெற்றியை ‘இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொன்பூண் நன்னன் பொருது களத்தொழிய, வலம்படு கொற்றந்தந்த வாய்வாள், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்’ எனக் கல்லாடனாரும் குறிப்பர் (அகம் 199).


31. கமழ்குரல் துழாஅய் !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : கமழ்குரல் துழாய். இதனுற் சொல்லியது: சேரமானின் மாட்சிமை யெல்லாம் உடன் எடுத்துப் புகழ்ந்தவாறு.

[பெயர் விளக்கம் : துழாயின் தழைக்கொத்துக்களாலே கட்டிய மாலையினை அணிபவன் திருமால். துழாயின் தழைக்கும் நறுமணம் உண்டு. இதனைக் ‘கமழ்குரல் துழாய் அலங்கற் செல்வன்’ என்று சொல்லிய சொல்லாட்சி நயத்தாலே இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது. ‘நக்கலர் துழாய் நாறுஇணர்க் கண்ணியை’ எனப் பரிபாடலும் இதனைக் கூறும் (பாடல் 4.). பிற பூக்களாலே நறுமணத்தை உடையன; துழாயோ தன் தழையையே நறுமணமாகக் கொண்டது என்னும் சிறப்புத் தகைமையையும் அறிந்து போற்றல் வேண்டும். கபத்தை அறுக்கும் தன்மையுடைய இதனை அலைகடல் துயில்வோனான மாயோனுக்கு உவப்புடைய தாக்கியதும் சிறப்பாகும். இதனைப் பற்றிய கதையினைத் திருமாலைப் பற்றிய பழங்கதைகள் சுவைபடக் கூறுவதும் கண்டு மகிழ்க.]


குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனந்தலை ஒருங்கெழுந்து ஒலிப்பத்
தெள்ளுயர் வடிமணி எறியுநர் கல்லென
5