பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

பதிற்றுப்பத்து தெளிவுரை

உயர்தல். பரேர் எறுழ் - பருத்த அழகிய வலிமை கொண்ட முந்நீர் - கடல். வண்புகழ் - வளவிய புகழ்; வண்மையான புகழும் ஆம். வகை சால் செல்வம் - எல்லா வகையானும் நிறைந்த சிறப்பமைந்த செல்வம். வண்டன் - ஒரு சிறந்த மாவீரன்.

ஒலித்த - தழைத்த; செழுமையான. அறஞ்சால் கற்பு அறநெறி நிரம்பிய கற்பு: அறநெறியாவது, இல்லற வொழுக்கம். குழை - காதணி. அவ்வாங்கு - அழகிய வளைந்த. உந்தி – கொப்பூழ். விசும்பு வழங்கு மகளிர் - சப்த கன்னியர் எழுவர்; செம்மீன் - சிவந்த விண்மீன். தொன்னகர்- பழைமைச் சிறப்பு வாய்ந்த அரண்மனை. செல்வி - செல்வமாக விளங்குபவள்; கோப்பெருந்தேவி. 'தொன்னகர்ச் செல்வி' என்றதனால், இவள் வஞ்சி நகரத்தாள் என்றும் கருதலாம்.

நிலன் - நிலத்து மக்கள்: இவர் நார்முடிச் சேரலின் நாட்டவர்; 'அவர் அதிர்பு இரங்கல' என்றது, அவரை வருத்திக் கொடியனெம் இறையெனும் பெயரை என்றும் பெற்றிலன் என்பதாம். வலன் - வெற்றி. ஏர்பு - எழுந்து. வியன்பணை - அகன்ற முழவு. வேல் - வேற்படைஞர். மூசுதல் - நெருங்குதல். புடையல் - மாலை. பொலம்- பொன். நோன்மை - வலிமை. ஒடுங்காத் தெவ்வர் - அடங்காது எதிர்த்து நின்ற பகை மறவர். ஊக்கற - ஊக்கம் அற்றுப் போக. கடைஇ - செலுத்தி; ஓட்டி. புறக்கொடை எறியார்- புறத்தே படுமாறு வேலினை எறியமாட்டார். மறப்படை கொள்ளுநர் - மறவர் படையின் தலைமை கொண்டவர்.

நகைவர் -நண்பர். அரணம் - காவல். சூர் - சூர்த் தெய்வம். குருசில் - தலைவனே. பலவே மாண்டனை - பலவானும் மாட்சிமைப்பட்டனை; மாட்சியாவது போர்க் களத்தும் ஆட்சியிடத்தும் பெற்ற தகைமை சிறந்த புகழ்.

அவன் போர் மறவரின் மறமாண்பை வியந்து கூறிப் பாராட்டியும், அவன் தேவியின் கற்பு மேம்பாட்டைப் போற்றிக் கூறியும், அவன் காவற்சிறப்பைப் புகழ்ந்தும் அவனது செவ்வியைப் போற்றுகின்றார். அவனையும் வாழ்த்துகின்றார்.