பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

பதிற்றுப்பத்து தெளிவுரை

மக்களை மீளவும் அப்பகுதிகளிலே குடிபுகச் செய்து நிரப்பி வெற்றிக் குரவையாடிய, தொடிவிளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும் உடையோனே! பகையரசர் எழுவரது முடிப்பொன்னாற் செய்த வெற்றிப் பதக்கமணிந்த, வீரத்திருமகள் விரும்பித் தங்கியிருக்கும் மார்பினையும், பொன்னாற் செய்த அழகிய தலைக்கண்ணியையும் உடையோனே! பொன்னாலாகிய தேரினையுடையவனாகிய நன்னன் என்பானின், ஒளிசுடரும் பூக்களையுடைய வாகையென்னும் காவன்மரத்தை அடியோடு வெட்டியவனே! முன்னணிப் படையினர் மிகுதியாகவுடைய வலிமைமிகுந்த நார்முடிச் சேரலே!

தெளிந்த கள்ளிலே களிப்பானது மிகுதியாகாதவாறு அதற்கேற்ற பொருள்களைக் கூட்டிய 'அரியல்' என்னும் கள்ளானது, தன்னையுண்டு மகிழும் இரவலர்களை வேற்றிடம் நோக்கிச் செல்லவிடாதே தடுத்து நிறுத்தும். அவரோடிருந்து தான் தனக்கெனக் கொணர்ந்த பூவரும்புகளாலே சமைக்கப்பெற்ற நறவினையுண்டு களிப்புற்றவனாக விளங்கும், பகைவர் நிமித்தம் காணும்வழி புல்லிய காலையுடைய உன்னமரமானது அவர் தோற்பது உறுதியென்பது போலச் சாய்ந்தே காட்ட, அருவிநீர் வீழ்தலாலே ஒலியுடைத்தா யிருக்கின்ற மலையாகிய நேரிமலைக்கு உரியோன் அவன்.

சிலவாகிய வளைகளை அணிந்துள்ள விறலியே! மலர்ந்த வேங்கையைப்போல விளங்கும் மென்மையான இயல்பினை யுடைய ஏனைய விறலியர் விளங்குகின்ற இழைகளை அணிந்தவராகத் தம் அழகுநலமாகச் சிறப்பெய்த, பாணர்கள் பசும்பொன் பூமாலையைச் சூட, ஏவலிளையர் இனிய களிப்பாற் குறையாத மென்சொற்களை விரும்பிச் சொல்லி, நெஞ்சு நிறைந்த உவகையினை உடையவராகப் பெரிய போர்க்களத்தின் சிறப்பை வாழ்த்துவர். பாகர் தோட்டியாற் குறிப்பிடுகின்ற குறிப்புக்கட்குத் தவறாமல், தொடியாகிய பூண்செறித்த படியே நின்று, தம்மால் எழுப்பப்படும் ஒள்ளிய புழுதித் துகள்கள் தீப்பொறிகளைப் போல நாற்புறமும் சிதறக், காட்டிடத்தே எழுந்த நாடனைத்தும் காணுமாறு விளங்கும் காட்டுத் தீயைப்போலும் கொடியதான சினத்தீயைக் கைவிட்டு, அப்பாகரது ஏவலைப் பொருந்தியமைந்த வலிமையினையும், போர்த் தொழிலை விரும்பும் இயல்பினையுமுடைய யானைகள் பலவற்றை அவன் நல்குவான். அவனிடத்தேயே செல்வாயாக!