பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

பதிற்றுப்பத்து தெளிவுரை

கிளையை வளைத்துப் பிளந்து ஒடித்துத் தன் பெரிய கருந்தலையிலேயும் அழகுறச் சூடிக்கொண்டது. அணிகளாகச் சேர்தலையுற்ற பகைவர்மேற் செல்லுதலை இயல்பாக உடையவரான படைமறவரோடு போரை ஏற்றுக்கொண்டு ஆர வாரித்தாற்போலச், சுரபுன்னைகள் நிறைந்த பெரிய காட்டகம் எல்லாம் எதிரொலிக்குமாறு, அக்களிறு பிளிறலையும் செய்தது.

தாம் சொல்லிய வஞ்சினம் சிறிதும் தப்பாதவாறு, அதனைச் செய்துமுடித்த சிறப்பினை உடையவரான, ஒரே பேச்சாகவே எதனையும் பேசும் இயல்பினரான நின் மறவர்கள், போர்முரசம் முழங்குதலையுடைய பெரிதான போர்க்களத்திடத்தே, எதிர்த்துநின்ற பகையரசர் பட்டழியுமாறு அவரை வெற்றிகொள்வர். வெம்மையினது மிகுதியானது பெருகுமாறு அப்பகையரசரின் பெருந்தலைகளை, உலக்கையால் மிளகை இடிப்பதுபோல இடித்துச் சிதைப்பார்கள். அதனாலே இடையறாத ஆரவாரவொலி எழுகின்ற கருநிறங் கொண்ட கடற்பரப்பைப்போல, எடுத்தெறியும் குறுந்தடியாலே முழக்கப்படுகின்ற அகன்ற கண்ணையுடைய முரசமானது, வெற்றியாலுண்டான புகழொலியோடும் கூடியதாக ஒருங்கே முழக்கத்தைப் பொருந்த, அக்களத்திடமெல்லாம் விளங்கும். ஒலிக்கின்ற அலைகளையுடைய குளிர்ச்சி வாய்ந்த கடலானது காற்றால் மோதுண்டு, ஒலித்தலையுடைய சிறுசிறு பிசிர்களாகச் சென்று உடையுமாறுபோல, வெள்ளிய தலையாட்டமணிந்த, விரையச் செல்லுங் குதிரையை ஊர்ந்து சென்று போருட்டற்றிப் பகைப்படையைச் சிதறடித்து நின் தாள்கள் வருந்துதலினின்றும் உய்யுமோ? அதனைச் சொல்வாயாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: புணர்புரி நரம்பு - இசை புணர்தற்குரிய முறுக்குடைய நரம்பு. தீந்தொடை - இனிதாகத் தொடுக்கும் இசை; இதனைச் செவ்வழிப்பாலை என்பர். வணர் - வளைவு: இது கோட்டின் வளைவு: 'வணர் கோட்டுச் சீறியாள், (புறம்.15) பண் - பண்ணுதல். கண்ணறுத் தியற்றிய தூம்பு - பெருவங்கியம். கலப்பை - கலங்கள் பெய்த பை. துறை - ஆடற்றுறை; இசைத்துறையும் ஆம். கடவுளைப் பழிச்ச - கடவுளைப் பராவிப் பாட; இங்குக் கடவுள் என்றது காடுறை கடவுளை. இது வழியிடை ஏதம் உறாமற்படிக்குக் காத்தலை வேண்டியாம். வயம் - வலிமை. வரை - பக்கமலை. வீ - பூ. சுடர்வீ - நெருப்புச் சுடர் போலத்