பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் பத்து

155

இதுகாலை மகிழ்வோடிருக்கின்றன. போரிடுதலாகிய செயலை விரும்புதலை உடையை நீ! ஆதலினாலே-

நின்னைப் பகைத்தோரும், தம் உளத்தெழுந்த வியப்பைத் தாங்காமாட்டராய் வாய்விட்டு புகழ்ந்த தூங்கலோசைத்தாகிய பாட்டிற்கு ஏற்ப முழங்கும் முழவினையுடைய, கெடாத கல்வியினையும் உடையோனே! நிணத்தைச் சுடுகின்ற புகையின் நாற்றத்தோடு, சனலானது தன் சினத்தைத் தவிராதாக மேலெழுகின்ற, நிரம்புதலும் அகலுதலும் அறியாத ஏறா ஏணியாகிய கோக்காலியின்மேல் வைக்கப் பெற்றுள்ள நிறைந்த கள்ளால் நிறைந்தும் நெடிதுநேரம் அவ்வாறே நிறைந்தபடி இராத கட்குடங்களிலிருக்கும், பாணர் முதலானோர் உண்டதன் பின்னரும் குறையாத கள்வளத்தையுடைய நின் திருவோலக்கத்தின் கண்ணே, நின் செல்வநிலை எல்லாம் கண்டேம். வளவிய கொடையுடைய வேந்தே, நீதான் வாழ்வாயாக!

சொற்பொருளும் விளக்கமும் : கவரி - கவரிமானின் மயிர். முச்சி - கொண்டை முடி. கவரி முச்சி - கவரிமானின் கொண்டை முடிபோலும் கொண்டை முடியும் ஆம். ஊசல் மேவல் - ஊசலாட்டை விரும்புதல், சேயிழை - செவ்வணிகள். இலங்கு வாள் மருப்பு - விளங்கும் ஒளிபொருந்திய கொம்பு. விருந்தின் வீழ்பிடி - எண்ணும் மகளிர்க்கு விருந்தாகி அவர் எண்ணிக்கான விரும்பிய இளம்பிடிகளும் ஆம். அவற்றை மட்டும் எண்ணியது தங்களைப் போலும் நடக்கும் நடையினது ஒப்புமை கண்ட மகிழ்வால் என்க. எண்ணு முறை - சங்கு, பற்பம் உள்ளிட்ட தொகை. பெறாஅ - பெறாராக; எண்ணிக்கை மேலும் மிகுதலால். கடவுள் . கடவுளர்கள்: முனிவர்களும் ஆம். சொல் பல நாடு - சொல்லப்படும் பல நாடுகளும் ஆம்; இவற்றை ஐம்பத்தாறு தேயங்கள் எனப் புராணங்கள் கூறும். ‘இமயத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட நாடுகள் எல்லாவற்றையும் வென்றனன்’ என்றது, எதிர்த்தோரைப் போராலும், அஞ்சியடங்கியோரைத் தன் அருளாலும் வென்றனன் என்பதாம். ‘பொலந்தார்’ பொன் மாலை.

பணை - மூங்கில். திரங்கல் - பசுமையற்றுக் காய்தல். பெயல் ஒளித்தல் - மழை பொய்த்தல். வறங் கூரல் - வறட்சியடைதல். சுடர் சினம் திகழ - ஞாயிறு சினத்தோடு கடுமை மையாக விளங்க. வறங்காலை - வறட்சிக்காலம். அருஞ் செலற் பேரியாறு - கடத்தற்கரிய நீர்ச் செலவையுடைய