பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

பதிற்றுப்பத்து தெளிவுரை

திரிந்தவாய்ச் சென்று கொண்டிருந்தன. கருமை நிறத்தை மேற்கொண்டு எழுதலையுடைய மிகப்பெரிய பலவான கேடகங்களுடன், வேலும் வாளும் ஏந்திக் கொண்டவராக, முன்னணிப் போரிலே ஈடுபட விரும்பி எழுந்தாரான வன்கண்மையுடைய படைமறவர்கள், தம் மெய்யை மூடும் கவசங்களைப் பற்றி நினையாதவராக, அவையின்றியே பகைப்படையணிகளை ஊடறுத்துச் சென்றனர். நோலாமைக்கு ஏதுவாகிய அவர்களது தும்பை மாலைகள், பகைப் படையணிகளின் இடையிடையே விளங்கித் தோன்றின. அதனால் வீழ்ந்துபட்ட பகைமறவர் பலரும், உயர்நிலை உலகத்தை அடைந்தனர். இவ்வாறு அறநெறியோடு பொருந்திய நற்போரைச் செய்து மேம்பட்டவன் நீ. “இடியினும் மாறுபட்டதான நின் பெரிய கையானது, இரப்போர்க்கு ஈதலின் பெரிய கையானது, இரப்போர்க்கு ஈதலின் பொருட்டாக மட்டுமே கவியும்; அன்றிப் பிறரை இரத்தற் பொருட்டாக என்றும் மலர்தலை அறியாதது என்று, சான்றோர் உரைக்கக் கேட்டுள்ளேம், பெருமானே!

இனியே,

ஒளிர்கின்ற கால்விளக்கின் செல்வம் விளங்கும் ஒளியிலே, முழக்கிற்கு ஏற்பத் துணங்கைக் கூத்து ஆடுகின்ற மகளிர்க்குக் கைகோத்தாடும் புணையாக, சிலைத்தலையுடைய வலிய கொல்லேற்றைப் போலத் தலைக்கை தருதலையும் செய்வாய். நீ தான் அம் மகளிரோடு செறிந்து ஆடிவரு வோனாயினை! அசைகின்ற கோதையினையும், பரந்த அழகுத் தேமல் புள்ளிகளையும், குளிர்ந்த இமைகள் பொருந்திய இருண்ட கண்களையும், பெரிய இயல்பினையும் உடையாளான நின் தேவியானவள், நின் துணங்கையாட்டத்தைக் கண்டு நின்பால் ஊடல்கொண்டனள். ஒள்ளிய இதழ்விரிந்த தாமரைப் பூவைப் போன்ற தன் சிற்றடிகளிலே அணிந்துள்ள பல மணிகளைக் கொண்ட இரு சதங்கைகளும், தன் சிறுபரடுகளே வருத்துமாறு கால்கள் நடுங்கக், கரையழிக்கும் நீர்ப்பெருக்கிலே பட்டு வருந்தும் தளிரைப்போல நடுங்கியவளாக நின்றபடி, நின்னை எறிதற்காகப் சிறிய செங்குவளை மலரினை ஒச்சினாள். அதனைக் கண்ட நீதான், அதனைத் தருக என்றபடி நின் கைகளை விரித்தாயாய் இரந்து நின்றனை. அந்த நின் செயலாலும், அவள் தன் சினங் குறையாதாளாயினள். அம் மலரை நினக்குத் தராதவளாக, ‘நீதான் எமக்கு எவ்வுறவினை உடையையோ?’ என்று சொல்லிவிட்டு