பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறாம் பத்து

187

அவ்விடத்தை விட்டுச் செல்லலானாள். அவள்கையிடத்தேயே அச் செங்குவளை மலரும் விளங்கிற்று.

திடுமெனக் கோபித்த பார்வையோடு சென்று, அக் குவளை மலரை அவள் கையினின்றும் பறித்துக் கைப்பற்றிக் கொள்ளுதற்கு, வல்லமை இல்லாதவனாக நீயும் அவ்வேளையில் ஆயிருந்தனை!

அகன்ற பெரிய வானத்தே பகற்காலத்திற்கு இடமுண்டாதலின் பொருட்டாகச், சுடுகின்ற கதிர்களைப் பரப்பி விளங்கும் அச்சம் பொருந்திய ஞாயிற்றினுடைய உருவத்தையும், விளங்குகின்ற வெண்மை வண்ணத்தையும் கொண்ட வெண்கொற்றக் குடையினையுடைய வேந்தர்களின், வானளாவ உயர்ந்த கோட்டை மதில்களைக் கைப்பற்றிக் கொள்ளுதற்கு, நீதான் எவ்வாறு வல்லமை உடையை யாயினையோ? நின் கண்ணி வாழ்வதாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கம்: கொடியேந்திப் பகைப் படையணிகளூடாகப் புகுந்து ஊடறுத்துச் செல்லும் களிறுகட்கும் தேர்கட்கும் கடலிடையே திசை திரிந்து செல்லும் கலங்களை உவமை கூறினர். திசை திரிந்தாலும், அவை செல்லும் திசைக்கே முடிவிற் சென்று சேர்வதுபோல, இவையும் பகைப் படியணிகளைச் சிதைத்தபின் மீண்டும் ஒன்றுகூடும் என்பதாம். ’களிறு மிடைந்து' என்றது, அவை பகைப்படைக் களிறுகளைத் தாங்கிச் செறித்து அழித்து என்றது ஆம். 'ஊர்ந்த தேரே, சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த கடுஞ்செலற் கொடுந்திமில் போல (அகம்.330) எனப் பிற சான்றோரும், தேர்ச்செலவைக் கடலிடைச் செல்லும் கலங்களின் செலவுக்கு ஒப்பிடுவர். இதனாற் கடல்போற் பெரும்படை உடைய பகைவர் என்பதும் பெறப்படும். நுடக்கம் - அசைவு. நிலைய - நிலைகளையுடைய. மிடைந்து - செறிந்து வடிமணி - வார்த்தமைந்த மணி. அருங்கலம் - நம் நாட்டில் கிடைத்தற்கரிய அணிகலம். நிவத்தல் - மிதத்தல். வங்கம் - கப்பல்கள். மை - கருமை. தோல் - கிடுகு: கேடகம். மெய் புதை அரணம் - கவசம். எஃகு - வேலும் வாளும் பிறவும். வன்கண் ஆடவர் வன்கண்மை உடையரான மறவர்; அவர் மெய்புதை அரணம் எண்ணாது எழுந்தது, அவர்தம் ஆற்றலிற் கொண்ட உறுதிப்பாட்டினால். தும்பை - தும்பை மாலை. எவ்வழி - எவ்வழியும், எப்புறமும். 'தும்பை வழி விளங்க' என்றது, பகைப்படை மறவர்கள் பட்டு வீழ்ந்தனர் என்றதாம். 'உயர்நிலை உலகம் எய்தினர் என்றது, அவரும் மறப் போராற்றி மாண்டனர் ---