பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

பதிற்றுப்பத்து தெளிவுரை

கவசம். குடவர் - குட நாட்டார். கோ- தலைவன். அண்ணல் - பெருமையாற் சிறந்தவன். தேரின் - தேர் மூலமாக. ஆர்பதன் - மிகுந்த உணவு. நகைசால் - விருப்பத்தை மிகுவிக்கும். இசைசால்- புகழ் மிகுந்த. நனந்தலை - அகன்ற இடம். தார் - தூசிப்படை; முற்பட விரையச் செல்லும் முன்னணிப் படை. பொருது சினம் - பொருதலாகிய சினம்; அஃது பகைவரை அழித்தலும் மறைந்தது. என்பார், ’தணிந்து' என்றனர். புகலல் - விரும்பல். ஓங்கல் - உயர்தல். பொங்கல் - பொங்கும் பஞ்சுப் பொதி போலப் பிசிர்பட்டுப் போதல் ; வெண்மேகத்திற்கு இது இயல்பு.


56. வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி!

துறை: ஒள்வாள் அமலை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு செந்தூக்கு. பெயர்: வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி. இதனாற் சொல்லியது: சேரனின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: மாற்றுவேந்தர் அஞ்சித் தங்கள் மெய்யை மறந்த வாழ்வு வேந்து மெய்ம்மறந்த காரணத்தால் வந்தது. இச்சிறப்பால் இப்பாடல் இப்பெயரைப் பெற்றது.

தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன், வெற்றிக் களிப்பாலே, தேர்த்தட்டிலே நின்று போர்த் தலைவரோடு கைபிணைந்து ஆடும் குரவை, 'ஒள்வாள் அமலை’ எனப்படும் (தொல். புறத். 21. உரை).

இதனாற் சேரலாதன் போர்மறத்திலேயே பெரிதும் விருப்புடையன் என்பதும், தன் வெற்றியிலும், தன் படையாண் மையிலும் உறுதியுடையவன் என்பதும் விளங்கும்.]


விழவுவீற் றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லா னல்லன்; வாழ்கஅவன் கண்ணி!
வலம்படு முரசம் துவைப்ப வாளுயர்த்து
இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன் 5

மடல்பெரு மையின் உடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத்து ஆடுங் கோவே.