பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

பதிற்றுப்பத்து தெளிவுரை

இச் சிறப்பானும், முன்னும் பின்னும் வந்த அடைச் சிறப்பானும், இதற்கு ’மரம்படு தீங்கனி' என்பது பெயராயிற்று" என்பர் பழைய உரைகாரர்.

இதனால், போர் செய்து பெறுகின்றதான வெற்றிப் புகழையன்றி, அப்போரின் பின்விளைவாகத் தான் பெறுகின்ற பொன்னும் பொருளுமாகியவற்றில் சேரமான் மனங் கொள்வானல்லன் என்பதும், அதனால் அவற்றைப் பேணுவானும் அல்லன் என்பதும் ஆகவே அவற்றை எல்லாம் தன்னை வந்து இரந்துநிற்பாரான இரவலர்க்கும், புகழ்ந்து பாடுவாரான பாணர்க்கும் புலவர்க்கும் வாரிவாரி வழங்கி மகிழ்வான் என்பதும் அறியப்படும்.

’மிஞிறு புறம் மூசவும், தீஞ்சுவை திரியாது, அரம்போழ் மரம்படு தீங்கனி' எனப் பலாப்பழத்தின் இனிமைச்சுவையையும், கனிந்த நிலையையும், நறுமணத்தையும் குறித்தனர். இதனைச் 'செம்பலா' என்பர். இவ்வாறு வழிவருவார்க்கு உதவும் எண்ணத்தோடு வழியிடையில் பலா மரங்களையும் மற்றும் பழமரங்களையும் வைத்துப் பேணி வளர்த்தல் பண்டையத் தமிழகத்தின் சிறந்த மரபாகும். பழைய காலச் சாலைகளின் ஓரங்களிலே மிகுதியாகக் காணப்பெறும் நாவல் மரங்களும், நெல்லி மரங்களும் நிழலோடு கனியும் தரக் கருதி அறிவோடு அமைக்கப் பெற்றனவே யாகும். 'நெடுஞ்சேண் வந்த நீர் நசை வம்பலர், செல்லுயிர் நிறுத்த கவைக் காய் நெல்லி' என வருவதும் காண்க - (அகம் 271).

’தொடை மடி களைந்த சிலையுடை மறவர்' என்றது, அம்புகளைத் தொடுத்துத் தொடுத்து எய்தபடியே இருத்தலன்றிச் சிறிது பொழுதேனும் ஓய்ந்திராத வில்லையுடைய மறவர் என்றதாம். இது அவரது போராண்மை கூறியதும் ஆம்.

சாயினம் - சாயலையுடைய மகளிரினம்; இவ்ரோடு இருத்தல் பாசைறைக்கண் இரவுப்போதில் களித்திருத்தல். கொடும் போர்களின் இடையிடையே இவ்வாறு மகிழ்வான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலே கலந்து மகிழ்வது போர் மறவர்களின் மரபு ஆகும். இது அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உள்ளதான இயல்பு.