பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழாம் பத்து

237

அமைந்ததும், வெட்டுண்ட வீரர்களின் நிணக்குவியல் கிடப்பதுமான போர்க்களப்பரப்பிலே, சிறகுகளையுடைய எருவைகளின் கூட்டங்கள் குருதியை நிறைய உண்டுகொண்டிருந்தன. தலைகள் வெட்டுப்பட்டுப்போய் எஞ்சிக் கிடந்த ஆண்மை மிக்கவையான மறவர்களின் குறையுடம்புகளோடு, அழகற்ற வடிவத்தையுடைய பேய்மகள் காண்போர்க்கு வருத்தத்தைச் செய்தபடி இருந்தாள். இவ்வாறு, பகைவரின் நாடுகள் அனைத்தும் ஒருசேர நடுக்கங் கொள்ளுமாறு, பல போர்களிலும் ஈடுபட்டுப் பகையரசரைக் கொன்றவன் வாழியாதன்.

மணம் வீசுகின்ற கொன்றை மலர்களோடு சேர்த்துத் தொடுத்த வெள்ளிய பனங்குருத்தும் கொண்ட தலைக் கண்ணியை உடையவர்கள்; வாளின் வாய் வெட்டியதனால் அமைந்த வடுக்களாகிய மாட்சிமைப்பட்ட கோடுகள் பொருந்திய உடலினைக் கொண்டவர்கள்; முறுக்குண்ட கொம்புகளையும் கரிய கண்களையும் கொண்ட ஆட்டுக்கிடாய் களோடு, வளைந்த தலைகளையுடைய பிற விலங்குகளின் தாழ்வான இழிந்த இறைச்சிகளையும் விற்பவர்கள்; ஊனை வைத்து வெட்டரிவாளால் வெட்டிச் சிதைக்கப் பயன்படுத்தும் மணைக்கட்டையைப் போன்று விளங்கும் பகைப்படையால் புண்பட்டுச் சிதைந்த மார்பினை உடையவர்கள்; அம் மார்புகளிற் பூசப்படும் சந்தனக்குழம்பையும் மறைத்தபடி அவ்வடுக்கள் தோன்ற விளங்குபவர்கள்; வாழியாதனுடைய படை மறவர்கள். அவர்களுடைய தலைவன் அவன்!

மலர்ந்துள்ள காந்தட்பூக்களைத் தெய்வத்திற் உரியவை எனக் கருதி அகன்று போகாதே, அவற்றையும் ஊதித் தேனுண்ட பின்னர், விரைந்து அவ்விடத்திலிருந்து பறக்கும் வண்டுகள், அப்பூக்களைத் தெய்வமானது விரும்புதலை யுடைத்து ஆயினமையாலே, தம்முடைய பறக்கும் பண்பினை இழந்துபோய்விடுவன வாகும். அத்தகைய பெருமை நிறைந்த நெடிய பக்கமலைகளை யுடையதாக, மிகவுயர்ந்து விளங்கும் நேரிமலைக்குரிய தலைவனும், செல்வத்தாற் சிறந்த கோமானுமாகியவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். அவனைப் பாடினையாகச் சென்றாயானால், நீதான் தெண்கடல் முத்தமொடு பிற நன்கலமும் பெறுகுவை.

சொற்பொருளும் விளக்கமும்: கொடுமணம் - ஓர் ஊர்; அணிகலன் செய்யும் தொழிலிற் பேர்பெற்றது. நெடுமொழி - பெரும்புகழ். ஒக்கல்- சுற்றத்தார். பந்தர் - ஓர் ஊர்; முத்துக்