பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

பதிற்றுப்பத்து தெளிவுரை

பெரிய அரண்மனைப் பக்கத்தேயுள்ள ஓவியங்களைப்போலச் செயலழிந்தவராக, நெடுஞ்சுவரிடத்தே நீ பிரிந்துசென்ற நாட்களின் எண்ணிக்கையைப் பலகாலும் எழுதினவராகி, அதனாலே இயல்பிலேயே சிவந்த விரல்கள் மேலும் சிவக்கப் பெற்றாருமாயினர். அழகிய தேமலையும், சிலம்பினையும், கண்டாரை வருத்தும் அழகையும் கொண்ட அம்மகளிரது உள்ளங்களை, அவ்வாறு நின்பாற் பிணித்துக் கொள்ளும் மணங்கமழுகின்ற மார்பினை உடையோனே!

நின் தாழ்நிழலையே தமக்குப் புகலாகக் கொண்டு வாழும் நின் மறவர்கள்-

காற்றே குறுந்தடியாக மோதுதலினாலே கடலாகிய முரசம் ஒலிசெய்தாற்போல, மிக்க ஒலியையுடைய முரசமானது மிகப்பரந்த வானத்திடத்தினும் சென்று அதிர்வைச் செய்யுமாறு சென்று, வேற்று நாட்டிடத்தேயுள்ள கட்டூராகிய பாசறையின்கண்ணே தங்கியுள்ளனர். விரும்பத்தக்க கோடுகள் நிலைபெற்றுள்ள பகைவரின் மதிலை அழித்தல்லது உண்ணுதலைச் செய்யோம் என்று உரைத்த வஞ்சினத்திற்கேற்ப, அவர் உண்ணாதே கழித்த அடுக்கிய பொழுதுகளும் பலவாகக் கழிந்தன. எனினும் மனம் விரும்பும் ஊக்கத்தை உடையவராகவும், உடல் தளரும் வாட்டத்தை உடைய வராகவுமே, பகைவர் உறையுளைத் தாம் கைக்கொள்ளும் வரையினும், அவர்கள் தம் பொழுதைக் கழிப்பார்கள்.

பகைவேந்தர் ஊர்ந்து செலுத்தும் யானையது வெண் கொம்பைப் பறித்துக்கொண்டு, கள்ளுக்கடைகளை அறிவிக்கும் கொடிகள் பறந்துகொண்டிருக்கும் கடைத்தெருவுக்குள் புகுந்து, அரிய கள்ளிற்கு அக்கொம்புகளை விலையாகத் தந்து குடித்து முடித்த பின்னர், அதனாலே களிப்பு மிகுந்தவர்களாவார்கள். அச்சத்தை அறியா இன்பவாழ்க்கையினையுடைய வடபுலத்தே வாழ்வாரினும் பெரிதாக விரும்பி, நாள்தோறும் இனிய மகிழ்ச்சி பொருந்திய பல நாட்களையும் அவர்கள் பெறுவார்களோ! அவர்கள் அது பெறினன்றி நின்னைக் காதலித்த மகளிரும் இன்னகை மேய பல்லுறை பெறுதலும் அரிதாகுமே!

சொற்பொருளும் விளக்கமும்: கால் - காற்று. கடிப்பு- குறுந்தடி. வேறுபுலம் - வேற்றரசர் நாடுகள். இறுத்த - தங்கிய. கட்டூர் - பாசறை, நாப்பண் - நடு. சிலை – ஒலித்-