பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழாம் பத்து

245

வண்டினம் இசைப்பாட்டைப் பாடாத குளிர்ந்த பனையினது குவிந்த மொட்டுப்போன்ற கூரிய வெண்மையான பனங்குருத்தைச் சேர்த்துக் கட்டிய, இனிய சுனை நீரிலே மலர்ந்த குவளைமலர் மாலையை அணிந்து, வலிமிக்கு மிக்க சினத்தையுடையவரான பகையரசரது நிலையான நற்போரையும் வெற்றி கொண்டு, அவரது மறத்தையும் கெடுத்து, அவர்தம் தலைமையையும் ஒழித்தவனே! வெற்றிச் சிறப்புப் பொருந்திய சிறந்த வீரக்கழலை அணிந்தோரான சிறந்த வீரர்களின் பெருமானே!

விளையாட்டாகவேனும் பொய் சொல்லாத வாய்மையினையும், பகைவர் புறத்தே தன்னைப் பழித்தார் என்று கூறினும், அதனை கேட்டுச் சினவாத குற்றமற்ற சிறந்த அறிவினையும் கொண்டோனே!

பெண்மைப் பண்புகள் நிறைந்தவளும், பெரிய மடமென்னும் தன்மை நிலைத்திருக்கப் பெற்றவளும், கற்பாகிய திண்மை தங்கியிருக்கப் பெற்றவளும், மணங்கமழும் ஒளி சுடரும் நெற்றியினை உடையவளும் ஆகிய உயர்ந்தோளின் கணவனே! பூணாரம் கிடந்து ஒளிவீசும் மார்பினைக் கொண்டோனே! நீங்காத கோட்பாட்டைக் கொண்ட அமைச்சர் முதலான அரசச்சுற்றம் சூழ்ந்திருக்க, வேள்வியின் மூலமாகத் தேவர்களையும் அவியுணவால் உண்பித்தனை! வேதங்களை ஓதுவதன்மூலம் உயர்நிலை உலகத்தேயுள்ள முனிவர்களையும் இன்புறச் செய்தனை!

அன்பரிடத்தே வணக்கமான மென்மையினையும், பகைவரிடத்தே வணங்காத ஆண்மையினையும் உடையோனே! இளந்துணைவர்களாகிய புதல்வர்களைப் பெற்றதன்மூலம் இறந்த நின் முன்னோரைக் காத்தவனே! மற்றும் இல்லறத்திற்கே உரியவாக வரும் பழங்கடன் அனைத்தையும் செய்து முடித்தவனே! வெற்றிப் போரையுடைய தலைவனே!

சிறந்த செல்வங்களை உடைய தேவர்கள் வாழும் வானுலகத்திடத்தும் கேட்குமாறு, இழுமென்னும் ஒலியோடு வீழ்ந்துகொண்டிருக்கும், பறையோசை போன்ற குரலை யுடைய அருவியானது உச்சியிடத்துள்ள பெரிதான சிகரங்கள் தோறும் நெருங்கித் தோன்றுதற்கிடமான நின் அயிரை என்னும் நெடிய மலைபோலவே, நின் வாழ்நாளும் என்றும் அழிவில்லாததாகுக, பெருமானே!