பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பதிற்றுப்பத்து தெளிவுரை

காட்டிடையே சென்று மேய்ந்த நரந்தம் புல்லையும், பருகிய பரந்து விளங்கும் அருவி நீரையும், தன் கனவிடத்தேயும் கண்டு இன்புற்றபடியே இனிதாக உறங்கியபடியிருக்கும் சிறப்பைக் கொண்டது, மேலோர் நிறைந்த பெரும்புகழ் இமையம்!

வடக்கின் கண்ணே அத்தகைய சிறப்பினதான இமையமும், தெற்கின் கண்ணே தென்குமரியும் ஆகிய இவ்விரண்டனுக்கும் இடைப்பட்டதாகிப் பரந்துகிடக்கின்றதான இந்த நாவலந்தீவிலுள்ள மன்னர்கள் பலருள்ளும், தம்மைத்தாமே செருக்கோடும் உயர்த்துச் சொன்னாரது மறவுரைகள் எல்லாம் கெட்டழியுமாறு, அவர்களை எல்லாம் களத்திலே தோல்வியுறச் செய்து சிறைப்படுத்துக் கொணர்ந்த வெற்றியாகிய, பலரும் புகழும் வெற்றிச் செல்வத்தைக் கொண்டோனே!

நீதான் களிற்றின் மேலோனாகி வெற்றி உலாவந்த அந்த அழகிதான காட்சியை யானும் இனிதாகக் கண்டு, என் உள்ளமும் மகிழ்ச்சியடைதலை உற்றேனே.

சொற்பொருள் : வரை மருள் புணரி - மலையோ என மயக்கந் தருமாறு உயர்ந்தெழுந்த பேர் அலைகள். துளக்கம் - விளக்கம். கமஞ்சூல் - நிறைவுற்ற சூல்; முதிர்ந்த சூல்; உயர்ந்த அலைகளாலே விளங்கும் கடலை இப்படி உவமிக்கின்றனர். நளி - செறிவு. மாக்கடல் - பெருங்கடல்: கருங்கடலும் ஆம். ஏமம் - பாதுகாவல். ‘சூருடை முழு முதல்’ என்றது, சூரனைத் தானாகக்கொண்டமாவினது அடிமரத்தை. விறல் - வெற்றியுடைமை. எஃகம் . வாள். ‘அருநிறம்’ என்றது. எளிதாக வெல்லற்கரிய வலிய மார்பகம் என, அவரது போர் வலிமையைக் குறித்ததாகும். மணி - நீலமணி. மலைக் கலவை - குங்குமக் கலவை. முரண் - மாறுபாடு. மொசிதல் - மொய்த்தல். திரள் . உருட்சியமைந்த. கடி - காவல். துமிதல், தடிதல் - வெட்டுதல்; துணித்தல். ‘வென்று’ என்றது. வஞ்சனையால் அன்றிப் போர்க்களத்தே எதிரிட்டுச் சென்று கொண்ட நேரிடை வெற்றியைக் குறிப்பதாகும்.

ஆரம் - முத்தாரம் - சந்தனத தேய்வையும் ஆம். கவிர் முள்ளு முருங்கை. கவரி - மானினத்துள் ஒரு வகை. மீக்கூறுநர் - உயர்த்துக் கூறப்படுவோர். துவன்றிய - தோன்றிய; நிறைந்த நரந்தம் - ஒருவகை நெடியுடைய புல்வகை. மறம் - மறத்தகைமை.