பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

பதிற்றுப்பத்து தெளிவுரை

-களும் பலியூட்டுக்களும் செய்து வழிபாடாற்றிப் போற்றுவதும் பண்டைய மரபாகும். இம்முரசத்தின் முழக்கொலியைக் கேட்டபோதிலேயே பகையரசர் பலரும், தமக்கும் அழிவு வந்ததெனக் கலங்கி நடுங்கியவராகத் திறைசெலுத்திப் பணிவதும் உண்டு. தன் முழக்கொலியாலேயே இப்படி வெற்றி தேடித் தருதலினாலே ’வெற்றி முரசம்' என்றனர் என்பதும் பொருந்தும்.

இதன் முழக்கொலிக்குக் கார்மழையின் கடிதான இடி முழக்கத்தை உவமை கூறினதும் சிறப்பாகும். இடிமுழக்கங் கேட்டபோது பாம்புகள் அச்சமுற்றவையாய் நடுங்கித் தம் வலியிழப்பதுபோலப், பகை மன்னரும் சேரலாதனின் போர் முரசொலி கேட்டதும் மனம் நடுங்கிப் பணிவர் என்பதாம்.

"பூட்கை" என்றது மனவூக்கத்தை. 'பூட்கை ஒள்வாள்’ என்றது. ஒள்ளிய வாளையுடையவரான படைமறவரது மனவூக்கத்தை.

’புண்ணுடை எறுழ்த்தோள்' என்றது புண்களையுடைய வன்மையைப் பெற்ற தோள்களை எப்பொழுதும் போர் செய்தலாலே புண்ணுடைத்தாயிருக்கும் தோள்கள் என்றதனால். அவரது போர்விருப்பத்தையும், போராண்மை மிகுதியையும் உரைத்துள்ளனர். இப்படிப்பட்ட மறவர்களை உடையவனாதலின், அவன் வெற்றி பெறுதலும் உறுதி என்பதை உணர்த்தினர்.

'கற்பு' என்பது திண்மையைக் குறித்ததாகும். 'திண்மை' மனத்திண்மை. குறிக்கோளிலே அசைக்கமுடியாத உறுதி கொண்டவன் சேரமான் என்பதனால், அவனுடைய புகழும் என்றும் குன்றாதே நிலைபெற்றிருக்கும் என்றனர்.

இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறை தானே பெரும் புலவனாக விளங்கியவன் என்பதும், இவனே பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பதும் சிலர் கொள்ளும் முடிபாகும். இவனுடைய பாலைப் பாட்டுக்கள் இவன் புலமையினை வலியுறுத்துவனவாகும். -