பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

பதிற்றுப்பத்து தெளிவுரை

உச்சாடனங்களால் தெய்வங்களை அழைக்கும் மரபு. மையூர் கிழான் - மையூர்வேள்; இவனுக்குத் தாய்மாமன்; இவனுக்கு அமைச்சனாகவும் குலகுருவாகவும் வீற்றிருந்த சிறந்த கல்வி உடையோன். புரோசு மயக்கி - புரோகிதரினும் சிறந்தோனாக, வேள்வித் தலைவனாகச் செய்து என்பதாம். 'பெருஞ் சதுக்கத்தமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்து இவண் நிறீஇ’ என்றது, புகார்க்கண் காவல் தெய்வங்களாக இருந்து, புகார் அழிவுக்குப்பின் மறைந்திருந்த பூதர்களை, மந்திரமரபினால் அழைத்துத் தன் வஞ்சிநகரிடத்தே நிலைபெறச்செய்து என்பதாம். சாந்தி - தெய்வங்களுக்குப் படையலிட்டுப் போற்றும் விழா. பெருங்குன்றூர் கிழார்: வேளாண்குடிப் பெரும் புலவருள் ஒருவர். வையாவிக்கோப் பெரும்பேகன், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி ஆகியோர் காலத்தவர்.


81. நிழல்வீடு கட்டி!

துறை:முல்லை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நிழல்விடு கட்டி. இதனாற் சொல்லியது: காமவேட்கையிற் செல்லாத இளஞ்சேரலின் வென்றி வேட்கை.

[பெயர் விளக்கம்: பகை நாட்டுள் கொள்ளைகொண்ட பொன்னை உருக்கிக் கட்டிகளாக வார்த்து, ஒளிவிடும் அப்பொற்கட்டிகளைத் தானைவீரர்க்கு அளித்தனன் எனக் கூறிய சிறப்பால் இப்பெயர் அமைந்தது. 'அழல் வினை அமைந்த’ என்னும் அடைச் சிறப்பானே 'நிழல் விடு கட்டி' என்று பெயராயிற்று என்பது பழைய உரைக் குறிப்பு.]



உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல்
அகலிரு விசும்பின் அதிர்சினம் சிறந்து
கடுஞ்சிலை கழறி விசும்படையூஉ நிவந்து
காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொள 5

களிறு பாய்ந்து இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
அரசுபுறத் திருப்பினும் அதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் 10