பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

பதிற்றுப்பத்து தெளிவுரை

கொண்டதுமாகிய மேகமானது, அகன்றதும் பெரியதுமான வானத்திடத்தே அதிரலைச் செய்யும் தன் சினத்திலே மிக்கதாகிக், கடுமையான முழக்கத்துடன்கூடி இடித்துக்கொண்டு மேலெழுந்து விசும்பினை அடைந்து, கார்காலத்தை அறிவிக் கின்றதான பருவத்தின் தோற்றத்தையும் செய்தது. அதனால். உலகுயிர்கள் எல்லாம் வருத்தங் கொள்பவாயின.

களிறுகள் நாற்புறம் பரந்தவாகச் சென்று கொண்டிருக்கின்றன. விரைந்த செலவையுடைய குதிரைகளை அவற்றின்மேல் ஏறிச்செலுத்துவோர் இழுத்துப்பிடித்து அடக்கிச் செலுத்தியபடி இருக்கின்றனர். ஒளி செய்யும் கொடிச் சிலைகள் அசைந்தாடத் தேர்கள் எப்புறமும் திரிவனவாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. இத்தகைய போர் முயற்சிகளுடன் பகையரசு நினக்குப் புறத்தே வந்து பாசறையிட்டுத் தங்கியுள்ளது. எனினும், இதனால் சற்றும் அதிர்வற்றவராக விளங்குகின்றனர் நின் மறவர்கள். ஓரிடமென அமைந்திராராய் பாசறையைச் சுற்றித் திரிந்தபடி காத்துவரும் வலிமை கொண்டோராய்த் திகழ்கின்றனர். மிகக் கரியதான அந்த இரவுப் பொழுதினும், அவரணிந்துள்ள வீரவளைகள் ஒளி செய்த வண்ணம் திகழ்கின்றன. அவற்றைத் தோள்களிற் செறித்தவராகக் கைகளை உயரத் தூக்கியவராகப், போர்செய்தலில் விருப்பஞ் சிறந்தவராக. ஒவ்வொருநாளும் தாம் செய்யும் போர் அன்றைக்குள்ளேயே முடிதல் வேண்டும் என்னும் வேட்கையினராக அவர்கள் விளங்குகின்றனர். தம் மறமாண்புகளை ஒருவருக்கொருவர் நெடுநேரம் சொல்லிக் கொள்பவராகக், கெடுதலற்ற நற்புகழை கொண்ட தம் மறக்குடியின் புகழை நிலைநிறுத்தும் பொருட்டாக, எல்லையிட்டுக் கூறவியலாத பரந்த நின் பாசறைக்கண்ணே சுழன்று திரிந்தபடி விளங்குகின்றனர். அவ்வாறே அவர் விளங்க -

நீயும் பகை நாட்டார்மேற் சென்றனையாய், அவர் நாடுகளை வென்று நின் அடிக்கீழ்ப்படுமாறு அவற்றை வெற்றி கொண்டனை. அடிப்பட்ட நாடுகளை வென்றோர் கொள்ளையிடுதல் என்னும் வழக்கத்தினை மாற்றினை. வெற்றி தேடித் தந்தவரான நின் மறவர்க்கு அழல்வினையிலே அமைந்த ஒளிவிடுகின்ற கட்டிகளாக உருக்கி வார்த்துக்கொண்ட தங்கக் கட்டிகளை, அத்தானை மறவர்களின் மேம்பாடுகளை அறிந்தார் எடுத்துக்கூற, அதற்கேற்ப அவர்க்கு வழங்கி உதவினை! இவ்வாறாக வேற்று நாட்டிடைப் பாசறையில் தங்கிய, வெல்லும் போராற்றலில் மிகுந்த தலைவனே!