பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் பத்து

295


உறலுறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்றமர்க் கடந்த வெந்திறல் தடக்கை
வென்வேற் பொறையன் என்றலின், வெருவர
வெப்புடை ஆடூஉச் செத்தனென் மன்யான்;
நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து 5

இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடுடை அண்ணல்
கழைநிலை பெறாக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த 10

பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே!

தெளிவுரை: 'பகைவரது வெட்டுப்பட்ட உடல்களினின்றும் ஒழுகுதலுறுகின்ற செந்நீராற் செருக்களம் புலவு நாற்றத்தை உடையதாகுமாறு, அவரைக் கொன்றுகுவித்த வெம்மையான திறலினைப்பெற்ற பெரிய கையினை உடையோனே! வெற்றி வேலினை ஏந்திய பொறையனே!' என்று பலரும் அவனைக் கூறுதலால், யானும் 'அஞ்சத்தக்க கொடுமையினையே தொழிலாகவுடைய ஓர் ஆண்மகன்' என்றே அவனைப்பற்றி முன்பெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன்.

அவன் நல்ல புகழாலே நிலைபெற்ற பரந்த இடத்தையுடையது இவ்வுலகம். இதனிடத்தே வறுமையாளரின் வறுமைத் துன்பம் அறவே அகன்று போகுமாறு கொடுக்கும் அறச் செயலை நாடுதலைப் பொருந்திய அன்புடைய நெஞ்சத்தோடு, தன்னைப் பாடிவருவாருக்குப் புரவலனாகவும் அவன் விளங்குவான். வெற்றிபொருந்திய ஒழுக்கத்தையுடைய தலைவன் அவன். ஓடக்கோலும் நிலைக்கமாட்டாத ஆழத்தை உடையதாயினும், புனலிற் பாய்ந்தாடும் மகளிர் குதித்து ஆடுதலாலே கழன்று வீழ்ந்த பொன்னாற் செய்யப்பெற்ற அழகிய காதணிகள், நீருக்கு மேலேயிருந்து காண்பாருக்கும் தெளிவாகத் தோன்றுவதும், சந்தனமரங்களை அடித்துக் கொண்டு வருவதுமான வானியாற்றுத் தெளிந்த நீரினுங் காட்டில், -